Master Plan போடும் பஜாஜ்..!!
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்திய சந்தையில், அதன் சந்தைப் பங்கினை இழந்து வரும் நிலையிலும், லாபத்தை அதிகரிப்பதற்காக, அது கையகப்படுத்திய மிகப்பெரிய நிறுவனமான, ஆஸ்த்ரியாவைச் சேர்ந்த கேடிஎம்-ஐ மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கேடிஎம்-இன் கீழ் உள்ள சிறிய பிராண்டுகளை நிறுத்துவது, முக்கிய செயல்பாடுகளை மறுசீரமைப்பது மற்றும் செலவுகளைக் குறைப்பதற்காக பஜாஜ் மற்றும் கேடிஎம்-இன் விநியோகச் சங்கிலிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளது.
நிதி நெருக்கடியில் இருந்த கேடிஎம் நிறுவனத்தை சுமார் 80 கோடி யூரோக்களுக்கு கையகப்படுத்தியது. கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா மோட்டார் சைக்கிள்களில் கவனம் செலுத்துவதற்காக, சைக்கிள், கார்கள் மற்றும் பிற சிறிய பிராண்டுகளிலிருந்து வெளியேற நிறுவனம் விரும்புவதாக தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த முயற்சிகள் தீவிரமாகத் தொடங்கும் என்று கூறியுள்ளது. கேடிஎம் நிறுவனத்திற்கு கேடிஎம் எக்ஸ்-போ என்ற ஸ்போர்ட்ஸ் கார் பிராண்ட் உள்ளது.
கேடிஎம்-இன் முக்கிய ஆலை ஆஸ்திரியாவில் இருந்தாலும், சீனா, பிரேசில் மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளில் அதற்கு அசெம்ளி தொழிற்சாலைகள் உள்ளன. 2023 ஆம் ஆண்டில், இவை அனைத்தும் 380,000 பைக்குகளை உற்பத்தி செய்தன. இந்தியாவில், பஜாஜுக்குச் சொந்தமான சாகன் ஆலையில் உள்ளூர் சந்தை மற்றும் ஏற்றுமதிக்கான வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஐரோப்பிய பிரீமியம் மோட்டார் சைக்கிள் சந்தையில் ஏற்பட்ட மந்தநிலையைத் தொடர்ந்து, கேடிஎம் நிறுவனம் நவம்பர் 2024-ல் திவால்நிலைக்கு விண்ணப்பித்து. 2024இல், கேடிஎம் 292,497 மோட்டார் சைக்கிள்களை விற்றது. இது முந்தைய ஆண்டில் விற்கப்பட்ட 372,511 யூனிட்களை விட 21% குறைவு. தனது விரிவாக்கத்திற்கு நிதியளிப்பதற்காக, அந்த நிறுவனம் 50 கோடி டாலருக்கும் அதிகமாக கடன் வாங்கியிருந்தது.
2007 முதல் பீரர் மொபிலிட்டி ஏஜி-யுடன் ஒரு கூட்டு நிறுவனமாக அந்த நிறுவனத்தை இயக்கி வந்த பஜாஜ் ஆட்டோ, மே மாதம் அதை முழுமையாகக் கையகப்படுத்தியது. பஜாஜ் கடன் நிதி மூலம் அந்த நிறுவனத்தில் 60 கோடி யூரோக்களை முதலீடு செய்ய உள்ளது. ஏற்கனவே 20 கோடி யூரோக்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஒப்பந்தத்தின் மொத்தத் தொகை 80 கோடி யூரோக்களாக (₹7,778 கோடி) உயர்ந்துள்ளது.
