அமெரிக்காவில் கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்கு தள்ளுபடி
மோசடி மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை கைவிடுவதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியக் கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்கை அமெரிக்க நீதிபதி ஒருவர் திங்களன்று தள்ளுபடி செய்தார். இவ்வழக்கை கைவிடுமாறு கூட்டாட்சி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் விடுத்த அரிதான கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு முன், அதானிக்கு ஏதேனும் சலுகை அல்லது வாக்குறுதி அளிக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட காரணங்களை விசாரித்த பின்னரே, புரூக்ளினைச் சேர்ந்த அமெரிக்க மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராஃபிஸ் இந்த முடிவை எடுத்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் தெரிய வருவதற்கு முன்பே, அதாவது 2024 நவம்பரில், அமெரிக்காவில் 1,000 கோடி டாலர் முதலீடு செய்வதாக அதானி உறுதியளித்திருந்தார்.
சூரிய ஆற்றல் மின் நிலையத்தை அமைப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் தனது நிறுவனத்தின் ஊழல் தடுப்பு நடைமுறைகள் குறித்து நம்பிக்கையூட்டும் தகவல்களை அளித்து அமெரிக்க முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாகவும் அதானி மீது 2024-ல் குற்றம் சாட்டப்பட்டது.
அதானி குழுமம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க அதானி, அமெரிக்க நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. மே 18 அன்று, இனி இவ்வழக்கை முன்னெடுத்துச் செல்லப்போவதில்லை என்று நீதித்துறை அறிவித்தது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இருக்கும் போது, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ‘வெள்ளை-காலர்’ (white-collar) குற்றவியல் வழக்கை கைவிடுமாறு கூட்டாட்சி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிய சமீபத்திய நிகழ்வாக இது அமைந்தது.
குற்றச்சாட்டுகளைக் கைவிடுவதற்கான முடிவை நியாயப்படுத்துமாறு நீதித்துறைக்கு நீதிபதி கராஃபிஸ் உத்தரவிட்டார்; அந்தத் துறையின் “மேலோட்டமான மற்றும் முடிவை மட்டும் அறிவிக்கும்” வகையிலான அறிக்கை தனக்குப் போதுமான தகவல்களை வழங்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஜூலை 4 அன்று தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணத்தில், நீதித்துறையின் மூத்த அதிகாரியான ட்ரெண்ட் மெக்கோட்டர், இவ்வழக்கு முக்கியமாக வெளிநாட்டைச் சார்ந்தது என்றும், இதை நிரூபிப்பது கடினம் என்றும், மேலும் இது அந்த அமைப்பின் தற்போதைய முன்னுரிமைகளுக்கு முரணானது என்றும் கூறினார்.
