TATAவுக்கு டஃப் கொடுக்கும் L&T ?
பிரம்மாண்டமான பொறியியல் நிறுவனமான லார்சன் & டூப்ரோ (எல்&டி), எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவை துறையில் (EMS) நுழைய திட்டமிட்டுள்ளது. சென்னைக்கு அருகில் சுமார் 200 ஏக்கர் நிலத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுடன் முதற்கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
$1,700 கோடி ஆண்டு வருவாய் கொண்ட எல் & டி குழுமத்தின் கூட்டணி நிறுவனங்கள் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் ஏற்கனவே ஈடுப்பட்டுள்ள நிலையில், டாடா குழுமத்தைப் போல, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில்,
முழுமையான உற்பத்தி திறன்களைக் கொண்ட ஒருங்கிணைந்த நிறுவனமாக மாற திட்டமிட்டுள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ் ஒப்பந்த முறை உற்பத்தி மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையராக செயல்படுகிறது. எல்&டி இந்த வழியை பின்பற்ற விரும்புகிறதா அல்லது அதன் சொந்த தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பெறியியல் துறையில் மெகா திட்டங்கள், கொள்முதல் மற்றும் கட்டுமானத் திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளுக்கான திட்டங்களை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வரும் எல்&டி இந்தத் துறைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது.
எல்&டி இந்த நிலத்தை எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவை பிரிவுக்கு மட்டுமல்லாமல், அதன் செமிகண்டக்டர் உற்பத்தி திட்டத்திற்கும் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்திருக்கும் இந்த நிறுவனத்தின் செமிகண்டக்கர் உற்பத்தி பிரிவு, எல் & டியின் பரந்துபட்ட லட்சியத்தின் ஒரு அங்கமாக உள்ளது. அதே சமயம், டாடா குழுமத்தைப் போல ஸ்மார்ட்போன் துறையில் நுழைவதில் எல் & டி ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
”கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வரும் எல் & டி குழுவின் சிப் வடிவமைப்பு மையத்தில் 400 பொறியாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெங்களூருவை தளமாகக் கொண்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் ஆஸ்டின், மியூனிக் மற்றும் டோக்கியோவில் உள்ளனர். இந்த மையம் 28 மற்றும் 48 நானோ மீட்டர்கள் ரக அனலாக் ரக சிப்களில் கவனம் செலுத்துகிறது” என்று எல் & டி தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்திருந்தார்
