கச்சா எண்ணெய் மட்டும் பிரச்சனை இல்லை??
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது விதித்த அதீத இறக்குமதி வரிகள், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல்களுடன் சிறிதும் தொடர்பற்றது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். இந்த சர்ச்சை டிரம்ப் மற்றும் தனி நபர்கள் பற்றியது மற்றும் இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது யார் என்பது பற்றிய முரண்பாடு ஆகியவற்றிலிருந்து உருவானது என்று வாதிட்டார்.
டிரம்பை மகிழ்விக்க இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ரகுராம் ராஜன், “ரஷ்ய எண்ணெய் கொள்முதல் ஒரு போதும் மையப் பிரச்சினையாக இருந்ததாக நான் நினைக்கவில்லை. நேற்று ஹங்கேரியில் விக்டர் ஓர்பன் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் பற்றி உறுதி செய்துள்ளதை டிரம்ப் அங்கீகரித்துள்ளார். எனவே அது மையப் பிரச்சினை என்று நான் நினைக்கவில்லை” என்று கூறினார்.
தூண்டுதல் வேறு இடத்தில் இருப்பதாக ராஜன் கூறினார். “மையப் பிரச்சினை ஆளுமைகள் பற்றியது தான். குறிப்பாக வெள்ளை மாளிகையில் உள்ள ஒரு ஆளுமை மற்றும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நிறுத்தியதற்காக டிரம்ப் உரிமை கோரிய பிறகு இந்தியா தெரிவித்த சில கருத்துக்களை அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பது தான்” என்று அவர் UBS மைய பொருளாதார உரையாடல் மன்றத்தில் பேசும் போது கூறினார்.
நெருக்கடியைத் தடுத்ததற்காக டிரம்ப்பை பாகிஸ்தான் பகிரங்கமாகப் பாராட்டியதாக அவர் விளக்கினார். அதே நேரத்தில் இந்தியா வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தது ; “பாகிஸ்தான் அதைச் சரியான வழியில் செயல்படுத்தியது. இது எல்லாம் டிரம்ப்பால் தான் என்று பாகிஸ்தான் கூறியது. டிரம்ப் இல்லாமல் இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்டியதாக இந்தியா வாதிட முயன்றது. உண்மை அநேகமாக இந்த இரண்டிற்கும் இடையில் எங்கோ இருக்கலாம். ஆனால், நிகர விளைவு என்னவென்றால், இந்தியாவுக்கு 50% வரி விதிப்பு, பாகிஸ்தானுக்கு 19% வரி விதிப்பு” என்றார்.
சுவிஸ் தலைவர்கள் டிரம்பிடம் வரி விதிப்புகள் பற்றி தெளிவுபடுத்த முயன்றது பற்றிய அறிக்கைகளையும் ராஜன் குறிப்பிட்டார். “இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. ஆனால் நீண்ட கால அளவில் அனைத்து தரப்பினரும் சரியான முடிவுகளை எடுத்து, பகுத்தறிவுடன் நடந்து கொளவார்கள் என்று நம்புகிறேன். சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியா மீது அமெரிக்கா அதிக வரி விதிப்புகளை தொடர எந்த காரணமும் இல்லை” என்றார்
