இன்டெலுடன் கைகோர்க்கும் TATA :
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஃபேப்ரிக்கேசன் மற்றும் OSAT (அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட்) தொழிற்சாலைகள், அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல்லின் தயாரிப்புகளை, இந்திய சந்தைக்காக தயாரித்து பேக்கேஜ் செய்யும் என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்கான ஹார்ட்வேர்கள், செமிகண்டக்டர் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாடா குழுமமும் இன்டெலும் கையெழுத்திட்டன. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை இந்தியாவில் மேம்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும் என்று கூறியுள்ளன.
“இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் EMS (எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவைகள்), OSAT மற்றும் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேசன் ஆகிய துறைகளில் டாடா எலக்ட்ரானிக்ஸின் எதிர்கால திட்டங்களுடன் ஒத்துப்போகிறது, இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, வலிமையான விநியோகச் சங்கிலியை சாத்தியப்படுத்துகிறது” என்று டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ரந்தீர் தாக்கூர் கூறியுள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்நிறுவனங்கள் இந்தியாவில் நவீன பேக்கேஜிங்கிற்கான ஒத்துழைப்பை ஆராயும்.
2030-ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் ஐந்து சந்தைகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியாவில், நுகர்வோர் மற்றும் நிறுவன சந்தைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட AI PC தீர்வுகளை விரைவாக அளவிடுவதற்கான வாய்ப்பையும் அவர்கள் ஆராய விரும்புகிறார்கள். “இன்டெலுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களுடன் இணைந்து, நவீன தொழில்நுட்பங்களையும், செமிகண்டக்டர்கள் மற்றும் சிஸ்டம்ஸ்களுக்கான தீர்வுகளை வழங்குவோம். வளர்ந்து வரும் AI துறையில் எங்களை நன்கு நிலைநிறுத்துவோம்” என்று டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்த ஒத்துழைப்பு இன்டெல்லின் AI அடிப்படையிலான கம்ப்யூட்டர் டிசைன்கள், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் EMS திறன்கள் மற்றும் டாடா குழும நிறுவனங்களின் சந்தை பங்குகளை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
