TATA போடும் மெகா Plan..
டானோன் எஸ்ஏவின் இந்திய ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் சிறப்பு ஊட்டச்சத்து பிரிவை கையகப்படுத்த, டாடா கன்சியூமர் பிராடக்டஸ் (TCPL) நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வேகமாக வளர்ந்து வரும் நல்வாழ்வு மற்றும் ஊட்டச்சத்து சந்தையில் அதன் விரிவாக்கத்திற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கையகப்படுத்தல், டாடா கன்சியூமர் பிராடக்டஸ் நிறுவனம் மதிப்பு கூட்டப்பட்ட ஊட்டச்சத்து பிரிவில் நுழைவதற்கு வழி வகுக்கும். அங்கு அது நெஸ்லே மற்றும் அபோட்டுடன் போட்டியிடும். சோல்ஃபுல், கேபிடல் ஃபுட்ஸ் மற்றும் ஆர்கானிக் இந்தியா போன்ற நிறுவனங்களை TCPL கையகப்படுத்தியன் மூலம் புரதம் நிறைந்த உணவுகள், ஆர்கானிக் உணவுகள் மற்றும் குளிர் பானங்கள் பிரிவுகளில் விரிவடைந்து வருகிறது.
முக்கிய உணவு வகைகள் மற்றும் தேநீர் தவிர இதர பிரிவுகளில், கையகப்படுத்துதல்கள் மூலம் நுழைய இந்நிறுவனம் பல ஆண்டுகளாக முயற்சித்து வருவதாக, நுவாமா நிறுவன ஈக்விட்டிஸின் நிர்வாக இயக்குனர் அப்னேஷ் ராய் கூறினார்.
இந்தியாவில், புரதம் பெரும்பாலும் தூள் வடிவில் நுகரப்படுகிறது, நிறுவனங்கள் முக்கியமாக ஜிம் செல்பவர்களை குறிவைக்கின்றன.
பெருந்தொற்றுநோய்க்குப் பிறகு, இந்தியா சுகாதார உணவுத் துறையில் ஒரு ஏற்றத்தைக் கண்டுள்ளது, பால் நிறுவனமான அமுல் கூட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புரதச் சந்தையில் நுழைந்தது. TCPL, டாட்டா சிம்ப்ளி பெட்டர் என்ற பிராண்டின் கீழ், நக்கெட்ஸ் மற்றும் பர்கர் பஜ்ஜிகளுடன் தாவர அடிப்படையிலான இறைச்சிப் பொருட்கள் துறையில் இறங்கியுள்ளது.
டானோனின் இந்தியா வணிகமும் பல திருப்பங்களுக்கு உட்பட்டுள்ளது. 2009இல் பிஸ்கட் தயாரிப்பில் பிரிட்டானியாவுடனான அதன் 13 ஆண்டுகால கூட்டணியை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு, 2012இல் வோக்ஹார்ட்டின் போர்ட்ஃபோலியோவை கையகப்படுத்துவதன் மூலம் ஊட்டச்சத்து துறையில் நுழைந்தது. 2010-இல் தனியாக பால் வணிகத்தை உருவாக்கியது. ஆனால் அமுல் மற்றும் மதர் டெய்ரி போன்ற பெரிய கூட்டுறவு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் 2018-இல் பால் துறையில் இருந்து வெளியேறி, ஊட்டச்சத்து பிரிவில் கவனம் செலுத்த தொடங்கியது.
