அடுத்த நிதியாண்டில் 6.8% வளர்ச்சி..
இந்தியாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை எட்டும் என்று பிரபல நிறுவனமான கிரிசில் கணித்திருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்த நிதியாண்டில் 6.8 %இருக்கும் என்றும் அந்நிறுவனம் கணித்திருக்கிறது. மேலும் இந்தியாவின் வளர்ச்சி என்பது வரும் 2031 ஆம் ஆண்டு உயர் நடுத்தர வருவாய் கொண்ட நாடாக மாறும் என்றும் அந்நிறுவனம் கணித்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் அதாவது 2031 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் என்பது 7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் உலகில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா 2031-ல் மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நிதியாண்டுகள் அதாவது 2025-2031 ஆகிய காலகட்டத்தில் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை கடந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி என்பது தற்போது 3.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. மேலும் உலகின் 5 ஆவது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையையும் இந்தியா கொண்டுள்ளது. இதற்கு முந்தைய இடங்களில் முறையே அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன. இதுமட்டுமின்றி 2031 ஆம் ஆண்டில் இந்தியர்களின் தனிநபர் வருவாய் என்பது 4,500 அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்திய உற்பத்தி துறை சிறப்பான காலகட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. உள்கட்டமைப்புகளில் அதிக முதலீடுகள் செய்யப்படுவதால் முதலீட்டாளர்களுக்கு சிறப்பான இடமாக இந்தியா அமைவதாக கிரிசில் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிஷ் மேஹ்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சில காரணிகளையும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதில் பிரதானமாக உலகளாவிய சந்தை, கால நிலை மாற்றம் ஆகியன உள்ளன. மின்சார வாகனத்துறை, ஆற்றல்துறை ஆகியன 2023-24 நிதியாண்டு காலகட்டத்தில் மிகச்சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் உள்ளூருக்கு மட்டுமின்றி உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும் அந்நிறுவனம் கணித்திருக்கிறது.