டாப் கியரில் அசத்தும் டாடா..
இந்தியாவில் மின்சார கார்கள் விற்பனையில் பெரிய பங்கு வகிப்பது டாடா நிறுவனத்தின் மின்சார கார்கள்தான்.
இந்நிலையில் டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன பிரிவு நிர்வாக இயக்குநர் சைலேஷ் சந்திரா அண்மையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டாடாவில் பிரபல வாகனங்களாக இருக்கும் கர்வ் மற்றும் ஹாரியர் ரகங்களில் மின்சார கார்கள் இந்தாண்டே சந்தைக்கு வந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு கார்களும் நடப்பாண்டின் 3 ஆவது காலாண்டில் வரும் என்றும் அவர் கூறியுள்ளார். அண்மையில் வேண்டாம் என்று ஃபோர்ட் நிறுவனம் விட்டுவிட்டு சென்ற சனாந்த் ஆலையில் மின்சார் கார்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அண்மையில் 725.7 கோடி ரூபாய் மதிப்பில் அந்த ஆலையை டாடா நிறுவனம் வங்கியிருந்தது. சனானந்த் ஆலையில் இருந்து நெக்சான் ரக மின்சார காரை வரும் ஏப்ரலில் இருந்து உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சைலேஷ் தெரிவித்தார். ஏற்கனவே இந்த ஆலையில் இன்டர்னல் கம்பஷன் எனப்படும் எரிபொருளால் இயங்கும் கார்களின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஒரு ஆலையில் மட்டும் ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய இயலும் மேம்படுத்தினால் 4.2 லட்சம் கார்கள் கூட உற்பத்தி செய்ய இயலும் என்கிறது டாடா மோட்டார்ஸ் வட்டாரங்கள். மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மின்சார கார்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. போட்டிக்கு தங்கள் நிறுவனம் பயப்படவில்லை என்றும் சைலேஷ் டெஸ்லாவை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.