பைக் நிறுவனங்கள் அசத்தல் திட்டம் :
பிரீமியம் ரக மோட்டார் சைக்கிள்களுக்கான ஜி.எஸ்.டி வரி உயர்வை ஏற்றுக் கொண்டு, விற்பனை விலையை பழைய அளவில் தொடர ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கடும் போட்டிகள் மற்றும் விற்பனை சரிவே இதற்கு காரணமாகும்.
350 சிசிக்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை மத்திய அரசாங்கம் 31% இல் இருந்து 40% ஆக உயர்த்தியது. 350 சிசிக்கு குறைவான மோட்டார் சைக்கிள்களுக்கான வரியை 28% இல் இருந்து 18% ஆகக் குறைத்தது. இது செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஹஸ்க்வர்னா, ஹார்லி-டேவிட்சன் X440, கேடிஎம் மற்றும் ராயல் என்ஃபீல்ட் கெரில்லா மாடல்கள் உட்பட 350 சிசி முதல் 500 சிசி பிரிவில் உள்ள மோட்டார் சைக்கிள்களின் விற்பனை, இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் முந்தைய ஆண்டை விட 6% குறைந்து 51,412 யூனிட்டுகளாக குறைந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரி உயர்வை சமாளிக்க விற்பனை விலையை உயர்த்துவது, குறிப்பாக முக்கியமான பண்டிகைக் காலத்தில், பிரீமியம் மோட்டார் சைக்கிள் தேவையை மேலும் பாதிக்கும் என்று நிறுவனங்கள் அஞ்சுகின்றன.
“ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு எதிர்பார்த்தபடி 350சிசி+ பிரிவு பைக்குகள் விற்பனை சரிந்துள்ளது. 350 மைனஸ் பிரிவு மீதான வரி 18% ஆகக் குறைக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம்” என்று ஒரு இரு சக்கர வாகன நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஹீரோ நிறுவனம், அதன் ஹார்லி-டேவிட்சன் X440 ஐ, ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு முந்தைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது, அதே போல பஜாஜ் நிறுவனம் அதன் ட்ரையம்ப் மற்றும் கேடிஎம் பைக்குகளின் விலையை உயர்தாமல் ,பழைய விலைக்கே விற்பனை செய்து வருகிறது.
நடுத்தர அளவிலான மோட்டார் சைக்கிள் சந்தையில் முன்னணியில் உள்ள ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் மட்டும், ஜிஎஸ்டி உயர்வை ஏற்றுக்கொண்ட ஒரே வெகுஜன சந்தை பிராண்ட் ஆகும். இது 350சிசிக்கும் மேற்பட்ட மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது.
