எப்படி ஜாம்பவானாகவே திகழ்கிறார் வாரன் பஃபெட்?
உலகளவில் முதலீடு செய்வோர்களில் பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்பவர் வாரன் பஃபெட். இவர் இன்றளவும் மிகப்பிரபலமான முதலீட்டாளராகவே இருக்கிறார். 2009ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்தபோதும்கூட, வாரன் தனது அசாத்திய திறமையால் பல வங்கிகளுக்கும் ஆலோசனை அளித்தார்.
முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி அமெரிக்க பொருளாதாரத்தின் சரிவில் இருந்து மீட்டதில் இவருக்கும் குறிப்பிட்ட அளவு பங்கு உள்ளது. பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள வாரன், தனக்கென பிரத்யேக போர்ட்ஃபோலியோவையும் தனியாக பராமரிக்கிறார். தனது சொந்த கணக்கு விவரங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் வாரன் அனைவருக்கும் அளித்திருப்பதாக அவரைப்பற்றி புத்தகம் எழுதிய எழுத்தாளர் ஆலிஸ் தெரிவித்திருக்கிறார். வாரன் பஃபெட் போன்ற பிரபலங்கள் எந்த வகை நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர் என்ற தரவுகளும் அண்மையில் கசிந்தன. அதில் பிரபலங்கள் வெளியில் சொல்வது ஒன்றாக இருக்கிறது.ஆனால் தனிப்பட்ட முறையில் வாங்கியிருக்கும் பங்குகள் வேறாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2000 முதல் 2019 ஆம் ஆண்டுவரை வாரன் பஃபெட் தனது சொந்த கணக்கில் 466மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார்.
பெர்க்ஷைர் நிறுவனம் வாங்காத பங்குகளில் பெருந்தொகையை தனிநபராக வாரன் பஃபெட் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 2012,2016 ஆம் ஆண்டுகளில் நடந்த முதலீடுகளே இதன் சாட்சியாகும். பெரிய நிறுவனங்களுக்கு பதிலாக இரண்டாவது தரத்தில் இருக்கும் சிறு நிறுவனங்களைத்தான் வாரன் பஃபெட் பல காலமாக குறிவைப்பதாகவும் கூறப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு ஜே.பி. மார்கன்,ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன பங்குகளையும் வாரன் தனிப்பட்ட முறையில் முதலீடும் செய்தார்.