செய்தி சேவை தொடங்குகிறார் மஸ்க் …?
டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லிண்டா அண்மையில் தனது ஊழியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது டிவிட்டர் எனப்படும் எக்ஸ் நிறுவனத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கூறியிருந்தார். அந்த கூட்டத்தில் எலான் மஸ்கும் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய மஸ்க்,எக்ஸ் தளத்தை நம்பகத் தன்மை வாய்ந்த செய்தி தளமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. PRNewswireஎன்ற நிறுவனத்துக்கு போட்டியாக எக்ஸ் வயர் என்ற சேவையை தொடங்க மஸ்க் ஆர்வம் காட்டி வருகிறார். பொதுமக்களும் செய்தியாளர்களாக திறந்தவெளி செய்தி தளமாக இதனை மாற்ற மஸ்க் முடிவெடுத்திருக்கிறார். எக்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படும் இன்ஸ்டாகிராமின் திரெட்ஸ் நிறுவனம், செய்தி உள்ளடக்கங்களை அளிக்காமல் விலகிச் செல்கிறது என்ற விமர்சனமும் எழாமல் இல்லை. திரெட்ஸ் நிறுவனம் செய்திக்கு அதிக முக்கியத்துவம் தராமல் ஆடம் மோசெரி தவிர்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே செய்தி உள்ளடக்கங்களை அளிக்கும் நிறுவனங்களுக்கும் பேஸ்புக் நிறுவனத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கிடைத்த கொஞ்சம் கேப்பில் கிடா வெட்டுகிறார் மஸ்க்.
கனடா நாட்டு அரசாங்கத்துக்கும் பேஸ்புக் நிறுவனத்துக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. அந்நாட்டில் ஆன்லைன் செய்தி சட்டம் என்ற சட்டமே இயற்றப்பட்டுள்ளது. இதன்படி கனடாவில் இருந்து இயங்கும் அனைத்து நிறுவனங்களும் குறிப்பாக ஊடக நிறுவனங்கள் , செய்தி பதிப்பாளர்கள் கனடா அரசாங்கத்துடன் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என்று தனியாக கம்பு சுற்றி வரும் மஸ்க், தொடக்கம் முதலே அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும் என்பதில் தனிகவனம் செலுத்தி வருகிறார்.. வரம்புகள் இல்லாமல் அனைத்து தரவுகளும் அளிக்கப்படவேண்டும் என்பதே மஸ்கின் பிரதான நோக்கமாக இருக்கிறது.