வோடஃபோன் ஐடியா நிறுவனம் திட்டவட்ட மறுப்பு..
தனியார் தொலைதொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில், எலான் மஸ்க் முதலீடு செய்வதாக வெளியான தகவலை வோடஃபோன் ஐடியா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. வைப்ரன்ட் குஜராத் என்ற நிகழ்ச்சி வரும் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதனை சுட்டிக்காட்டி , வோடஃபோன் ஐடியா நிறுவனம் தகவலை மறுத்துள்ளது. இது தொடர்பாக மும்பை பங்குச்சந்தையும் வோடஃபோன் ஐடியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது. இதற்கு வோடஃபோன் ஐடியா நிறுவனம் எழுத்துப்பூர்வமான மறுப்பை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 5 விழுக்காடு வரை சரிவை கண்டது. கடந்தாண்டு ஜூலை மாதமே ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்திய விண்வெளி சந்தையில் நுழைய விரும்புவதாக தகவல்கள் பரவின. இதற்கான முன்முயற்சிகளை ஸ்டார்லிங்க் நிறுவனம் 2022ஆம் ஆண்டே செய்ததாக தகவல்களும் பரவின. ஆனால் ஸ்டார்லிங்க் நிறுவனம் தனது பணிகளை திரும்பப்பெற்றுக்கொண்டது. எது எப்படி இருந்தாலும் குஜராத்தில் நடக்கும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் மஸ்கின் ஸ்டார்லிங்க் அல்லது டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டை செய்ய இருப்பது மட்டும் நிச்சயம்.