வட்டி விகிதம் குறையுமா?
ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆல்பர்ட் பார்க், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகளினால் ஆசிய மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆசிய வளர்ச்சிக்கான முன் கணிப்பு அறிக்கையில், அந்த பிராந்தியத்திற்கான வளர்ச்சி விகித முன் கணிப்பு குறைக்கப்பட்டுள்ளது. 2025 வளர்ச்சி விகித முன் கணிப்பு 0.1% அளவுக்கு குறைக்கப்பட்டு, 4.8% ஆகவும், 2026ல் இது 0.2% குறைக்கப்பட்டு 4.6% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பொருத்தவரை, சமீபத்திய ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) குறைப்பு, புதிய முதலீடுகளை தூண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஏனெனில் விலைகளைக் குறைப்பதன் மூலம், அது அந்தப் பொருட்களுக்கான நுகர்வோர் தேவையை அதிகரிக்கும். அரசாங்கம் தனியார் நிறுவனங்களை முதலீடு செய்வதிலிருந்து தடுப்பது என்ன என்று சர்வே எடுத்து, தனியார் முதலீட்டை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகளுக்கு இந்தியா பதிலடி கொடுக்க கூடாது என்றும், அது இந்தியாவிற்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் பகுப்பாய்வு மற்றும் மாதிரிகள் காட்டுவதாக கூறியுள்ளார். இந்த விஷயத்தில் இந்தியா சரியான பாதையில் செல்வதாக குறிப்பிட்டார்.
