TATA CAPITAL போடும் Master Plan
அடுத்த மாதம் பங்கு சந்தையில் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு (ஐ.பி.ஓ.) வரத் தயாராகும் டாடா கேபிடல் தனது வாகன நிதி பங்கீட்டில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது.
புதிய வாகனக் கடன்களை குறைத்து, பயன்படுத்திய பழைய வாகன கடன்களை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது 30% உள்ள பழைய வாகன நிதி பங்கை, 50% ஆக உயர்த்தவேண்டும் என்பதே நோக்கமாகும். இதனால் அதிக லாப விகிதம், குறைந்த கடன் மதிப்பு விகிதம், சிறந்த கடன் ரிட்டன்ஸ் கிடைக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.
மே மாதத்தில் டாடா மோட்டார்ஸ் பைனான்ஸ் டாடா கேபிடலுடன் இணைக்கப்பட்டது. இணைப்புக்கு முன், டாடா மோட்டார்ஸ் பைனான்ஸ் புதிய, பழைய வாகனங்களுக்கும், டீலர்கள், போக்குவரத்து நிறுவனங்களுக்கும் கடன் வழங்கியது. 2024-ம் ஆண்டின் மார்ச் நிலவரப்படி டாடா மோட்டார்ஸ் பைனான்ஸின் கடன் ₹30,227 கோடி, டாடா கேபிடல் ₹1.98 லட்சம் கோடி.
ஆனால் இணைப்புக்குப் பிறகு, டாடா கேபிடலின் கிரெடிட் காஸ்ட் விகிதம் 0.4% -லிருந்து 1.4% ஆக உயர்ந்தது. மொத்தமாக செலவு ₹592 கோடியில் இருந்து ₹2,827 கோடியாக அதிகரித்தது.
இருப்பினும், பஜாஜ் பைனான்ஸ் (2.2%), எல் & டி பைனான்ஸ் (2.5%) விட டாடா கேபிடலின் நிலை சிறப்பாகவே உள்ளது.
இணைப்புக்குப் பின், டாடா மோட்டார்ஸ் பைனான்ஸ் புக் வால்யூ குறைவாக இருந்ததால், புதிய திசை திருப்பம் அவசியமானதாகியுள்ளது. டாடா கேபிடலின் நிலுவை 90 நாட்களுக்கு மேல் தாமதமான கடன்கள் 1.5% இருந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் பைனான்ஸை சேர்த்தால் அது 1.9% ஆக உயர்ந்தது.
இந்நிலையில், ஐ.பி.ஓ. மூலம் டாடா கேபிடல் சுமார் $2 பில்லியன் திரட்ட உள்ளது. டாடா சன்ஸ், ஐ.எஃப்.சி. உள்ளிட்டவர்கள் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளனர். ஆர்.பி.ஐ. விதிமுறைகளின் கீழ், பெரிய என்.பி.எஃப்.சி.க்கள் 30 செப்டம்பருக்குள் பங்கு சந்தைக்கு வர வேண்டும் என்பதால், அக்டோபர் முதல் பாதியில் இந்த வெளியீடு நடைபெறும்.
ஆய்வாளர்கள், டாடா கேபிடல் பட்டியலிடப்படுவது வீடு, வாகனம், சிறு வியாபாரக் கடன்களில் போட்டியை அதிகரிக்கும் என்றும், பிற என்.பி.எஃப்.சி.க்களின் மதிப்பீட்டிலும் தாக்கம் ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.
