3 ஆக பிரியும் மஹிந்திரா ?
மஹிந்திரா குழுமம் அதன் முக்கிய உற்பத்தி பிரிவுகளான டிராக்டர்கள், பயணிகள் வாகனங்கள் (EV-கள்) மற்றும் லாரிகள் ஆகியவற்றை தனி நிறுவனங்களாகப் பிரிக்க திட்டமிடுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இத்தகைய நடவடிக்கையின் சாத்தியக்கூறு மற்றும் அதன் விளைவுகள் பற்றி மதிப்பிடுவதற்கான ஆலோசனைகள் தொடங்கியுள்ளன. தற்போது, இந்த மூன்று உற்பத்தி மையங்களும், குழுவின் முதன்மை நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா (M&M) இன் கீழ், மூன்று பிரிவுகளாக செயல்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆட்டோமோபைல்ஸ் மற்றும் விவசாய உபகரணத் துறை (FES) பிரிவுகள் இரண்டும் வலுவான வளர்ச்சியை பெற்றுள்ளன.
இது SUVகள் மற்றும் டிராக்டர்களில், மஹிந்திராவின் சந்தை பங்கினை வலுப்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் ஆட்டோமொபைல்ஸ் துறையை நோக்கி இந்நிறுவனத்தின் கவனம் குவிந்துள்ளது.
விவசாயத்துடன் தொடர்புடைய பண்ணை உபகரணங்கள் விற்பனை, பருவமழை, கிராமப்புற டிமாண்ட் மற்றும் அரசாங்க மானியக் கொள்கைகளைச் சார்ந்து இருப்பதால், அது சீராக இல்லாமல், நிலையற்ற தன்மையில் தொடர்கிறது. எனவே பயணிகள் வாகனங்கள், லாரிகள் உற்பத்தியில் இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
நிறுவனத்தை மூன்றாக பிரிப்பது குறித்த கேள்விகளுக்கு மஹிந்திரா குழுமம் பதில் அளிக்க மறுத்து விட்டது.
ஆட்டோமொபைல்ஸ் பிரிவு மட்டும், M&M இன் தற்போதைய பங்கு விலையான ₹3,400 இல் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது என்று துறை சார் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இந்நிறுவனத்தை மூன்றாக பிரிப்பதன் மூலம், மூலதன ஒதுக்கீடுகளை செம்மைப்படுத்தி, ஒவ்வொரு பிரிவும் சுயாதீனமாக செயல்பட வகை செய்து அவற்றின் சந்தை மதிப்பை அதிகரிக்க செய்யலாம் என்று கூறினர்.
திட்டம் தொடர்ந்தால், டிராக்டர் வணிகம் – 2007 இல் பஞ்சாப் டிராக்டர்களை கையகப்படுத்தியதிலிருந்து மஹிந்திராவால் வழிநடத்தப்படும் சந்தை – ஒரு தனி நிறுவனமாக உருவாகலாம்.
மகிந்திராவின் டிராக்டர் பிரிவு, 2024-25 இல் 43.3% சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது. இது 2020-21 இல் 38.2% ஆக இருந்தது. 2007ல் பஞ்சாப் டிராக்டர்ஸ் நிறுவனத்தை மகிந்திரா வாங்கியது.
ஸ்கார்பியோ, தார், எக்ஸ்யூவி வரிசை, மற்றும் பார்ன் எலக்ட்ரிக் தளம் போன்ற வெற்றிகரமான பிராண்டுகளைக் கொண்ட பயணிகள் வாகனப் பிரிவு மற்றொரு சுயாதீன நிறுவனமாக மாற்றப்படும்.
அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் சிறிய பிரிவான லாரிகள் மற்றும் வணிக வாகனப் பிரிவு ஒரு தனி நிறுவனமாக உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
