மருந்துகளுக்கு 100% வரி:டிரம்ப்
அக்டோபர் 1 முதல் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா 100 சதவீத வரி விதிக்க உள்ளது. இது இந்திய மருந்து உற்பத்தியாளர்களை பெரிதாக பாதிக்காது.
சன் பார்மா மட்டும் சிறிய அளவில் பாதிப்படையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய நிறுவனங்களில் சன் பார்மா மட்டுமே அமெரிக்காவில், காப்புரிமை பெற்ற மருந்துகள் விற்பனை மூலம் கணிசமான விற்பனையைக் கொண்டுள்ளது (2024-25 வருவாயில் சுமார் 17 சதவீதம்) என்று HSBC குளோபல் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தொழிற்சாலைகளை அமைக்கும் மருந்து நிறுவனங்கள் தவிர, அக்டோபர் 1 முதல் அமெரிக்காவிற்குள் நுழையும் பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்தது. அங்கு தொழிற்சாலைகளை கட்ட தொடங்கியுள்ள நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
FY25ல், காப்புரிமை பெற்ற தயாரிப்புகள் மூலம் சன் பார்மா உலக அளவில் 121.7 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு விற்பனையைப் பதிவு செய்துள்ளதாக HSBC தெரிவித்துள்ளது.
இதில் அமெரிக்க சந்தையில் சுமார் 110 கோடி டாலர் (உலகளாவிய விற்பனையில் 85-90 சதவீதம்) விற்பனை செய்துள்ளது. இது மொத்த வருவாயில் 17 சதவீதமாகவும், FY25 இல் ஒருங்கிணைந்த EPS இல் 8-10 சதவீதமாகவும் இருந்தது.
“பொதுவான (காப்புரிமை இல்லாத) மருந்துகள் அமெரிக்க வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன, எனவே மற்ற இந்திய நிறுவனங்களுக்கு எந்த தாக்கமும் இல்லை” என்று HSBC கூறியுள்ளது.
கிரிசில் மதிப்பீடுகளின் மூத்த இயக்குனர் அனுஜ் சேத்தி, இந்த புதிய இறக்குமதி வரி இந்திய மருந்து உற்பத்தியாளர்களை பெரிதாக பாதிக்காது என்று கூறியுள்ளார். அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளில் பெரும் பகுதி காப்புரிமை இல்லாத மருந்துகளை உள்ளடக்கியது என்பதால் அவை இந்த வரி விதிப்பிற்குள் வராது என்றார்.
