அமெரிக்காவில் குறைகிறது weightloss மருந்துவிலை..?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரபல எடை குறைப்பு மருந்துகளின் விலையைக் குறைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பேசிய டிரம்ப், எலி லில்லி மற்றும் நோவோ நோர்டிஸ்க் ஆகிய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை வெளியிட்டார். வீகோவி மற்றும் ஜெப்பவுண்ட் உள்ளிட்ட உடல் பருமன் குறைப்பு மருந்துகளுக்கு, நுகர்வோர்கள் மாதத்திற்கு $245 முதல் $350 வரை செலுத்த உள்ளனர்.
நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பல GLP-1 மருந்துகளுக்கு, காப்பீடு மற்றும் விலை தள்ளுபடி இல்லாதாவர்கள், மாதத்திற்கு $1,000க்கும் அதிகமாக செலவு செய்கின்றனர்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் எலி லில்லி மற்றும் நோவோ நோர்டிஸ்க் நிறுவனங்களின் மருந்துகளை, மெடிகேர் மற்றும் மெடிகெய்டு நலத்திட்டங்கள் மூலம் எளிதாக பெற முடியும். இவை முதியோர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கர்களுக்கான பொது சுகாதாரத் திட்டமாகும்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, எலி லில்லி நிறுவனத்தின் மருந்துகளுக்கு அமெரிக்காவில் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது.
மெடிகேர் பயனாளிகளில் 10% பேர், GLP-1 மருந்துகளுக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்திற்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்றும், இதற்காக $50 மட்டுமே செலுத்துவார்கள் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ள நாடுகளில் மருந்துகளின் விலைகள் குறைவாக உள்ள நிலையில், அமெரிக்காவிலும் அதே அளவிற்கு மருந்து விலைகளை குறைக்கும் நோக்கத்தில் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
ஜனவரி மாதத்திற்குள் அமெரிக்க அரசினால் தொடங்கப்பட உள்ள நேரடி நுகர்வோர் வலைத்தளமான டிரம்ப்ஆர்எக்ஸில், உடல் பருமன் மருந்துகள் தள்ளுபடி விலையில் விற்கப்பட உள்ளன.
டிரம்ப்ஆர்எக்ஸில், வீகோவி மற்றும் ஜெப்பவுண்ட் சராசரியாக மாதத்திற்கு $350 இல் தொடங்கி, இரண்டு ஆண்டுகளுக்குள் $250 ஆகக் குறையும் என்று நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓசெம்பிக், வீகோவி, மவுஞ்சாரோ மற்றும் ஜெப்பவுண்ட் ஆகியவற்றின் மெடிகேர் விலைகள் $245 ஆக இருக்கும்.
