பெரிய பாதிப்பு Waiting???
இறக்குமதி வரிகளை 50 சதவீதம் வரை உயர்த்த மெக்சிகோ எடுத்த முடிவு, வோக்ஸ்வாகன் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட முக்கிய இந்திய கார் ஏற்றுமதியாளர்களின் 100 கோடி டாலர் மதிப்புள்ள ஏற்றுமதிகளைப் பாதிக்க உள்ளது.
உள்நாட்டு வேலைகள் மற்றும் உற்பத்தியைப் பாதுகாக்க, சீனா மற்றும் இந்தியா உட்பட வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாத நாடுகளின் நூற்றுக்கணக்கான பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை அடுத்த ஆண்டு உயர்த்த மெக்சிகோ அரசு ஒப்புதல் அளித்தது.
ஆனால், இறக்குமதி வரி உயர்வு, உற்பத்தி செலவுகளை அதிகரிக்கும் என்று உள்ளூர் வணிகக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதையும் மீறி, சீனாவுடனான வணிகத்தைக் குறைக்க மெக்சிகோ மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கார்களுக்கான இறக்குமதி வரி 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயரும், இது இந்தியாவின் மிகப்பெரிய வாகன ஏற்றுமதியாளர்களான வோக்ஸ்வாகன், ஹூண்டாய், நிசான் மற்றும் மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க அடியாகும்.
VW, ஹூண்டாய் மற்றும் சுஸுகி ஆகியவற்றை அதன் உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்துறை குழுவான இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளில் மாற்றம் செய்யாமல் இருக்கும்படி மெக்சிகோவை வலியுறுத்துமாறு, இந்தியாவின் வர்த்தக அமைச்சகத்தை கடந்த நவம்பரில்,வலியுறுத்தியிருந்தது.
இந்த வரி உயர்வு இந்திய வாகன உற்பத்தியாளர்கள் மெக்சிகோவை நம்பியிருக்கும் உத்திகளை மறு மதிப்பீடு செய்ய கட்டாயப்படுத்தக்கூடும். இது தென்னாப்பிரிக்கா மற்றும் சவுதி அரேபியாவிற்குப் பிறகு இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் ஏற்றுமதி சந்தையாகும்.
கடந்த நிதியாண்டில் இந்தியா $530 கோடி மதிப்புள்ள பொருட்களை மெக்சிகோவிற்கு அனுப்பியது. இதில் கார்கள் கிட்டத்தட்ட $100 கோடியை எட்டின என்று சுங்கத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலிருந்து மெக்சிகோவிற்கு அனுப்பப்படும் பெரும்பாலான கார்கள் ஒரு லிட்டருக்கும் குறைவான எஞ்சின் அளவு கொண்ட சிறிய கார்கள் என்றும், அவை மெக்சிகன் சந்தைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், அமெரிக்காவிற்கு மேலும் ஏற்றுமதி செய்வதற்காக அல்ல என்றும் கார் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
