சீனாவிலும் தொடரும் ஆதிக்கம்..!!
எலி லில்லி & கோ., ஃபைசர் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள், சீனாவின் முதல் புதுமையான மருந்துகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சீன அரசின் மருந்து காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட முடியாத அளவுக்கு மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படும் (இம்மூன்று நிறுவனங்களின்) 19 மருந்துகள், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மாறாக இவை தனியார் நிறுவனங்களின் சுகாதார காப்பீட்டு திட்டங்களில் சேர்க்கப்பட உள்ளன.
இதன் மூலம் இம்மூன்று நிறுவனங்களுக்கும் சீனாவில் ஒரு புதிய சந்தை திறக்கப்பட்டுள்ளது. விலையுயர்ந்த, அதிநவீன சிகிச்சைகளுக்கான மருந்துகளின் விற்பனையை இதன் மூலம் அதிகரிக்க முடியும். இந்த மருந்துகள் புற்றுநோய் மற்றும் அல்சைமர் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும், அரிய மரபணு கோளாறுகளுக்கான சிகிசைக்கும் பயன்படும்.
சீனாவில் முதியவர்களின் விகிதம் மற்றும் எண்ணிக்கை அதிகரிப்பதால், புற்றுநோய் மற்றும் நீரிழிவு முதல் டிமென்ஷியா வரையிலான நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த மருந்துகளை தனியார் காப்பீட்டு பட்டியலில் மருந்துகளைச் சேர்ப்பது பொது மருத்துவக் காப்பீட்டின் மீதான சுமையைக் குறைக்கும். பன்னாட்டு மற்றும் சீன மருந்து தயாரிப்பாளர்கள் தங்கள் மருந்துகளை அதிக விலைக்கு விற்க அனுமதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அல்சைமர் நோய்க்கு சிகிச்சையளிக்கும் எலி லில்லியின் கிசுன்லா மற்றும் ஐசாய் கோ.வின் லெகெம்பி ஆகியவற்றுடன், இந்தப் பட்டியலில் ஃபைசர், ஜான்சன் & ஜான்சன் மற்றும் பிரிஸ்டல்-மையர்ஸ் ஸ்குவிப் கோ ஆகியவற்றின் புற்றுநோய் மருந்துகளும் இடம்பெற்றுள்ளன. புற்றுநோய் சிகிச்சைக்கான CAR-T செல் சிகிச்சைகளின் ஐந்து தயாரிப்பாளர்கள் உட்பட, உள்ளூர் மருந்து தயாரிப்பாளர்கள் பலரும் பட்டியலில் இடம் பெற்றனர். பட்டியலில் இரண்டு மருந்துகளைக் கொண்ட ஒரே நிறுவனம் BeOne மெடிசின்ஸ் மட்டுமே.
புதிய பட்டியல் புதுமையான மருந்துகளுக்கு நிதியளிப்பதில் வணிக காப்பீட்டின் பங்கை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மருந்து தயாரிப்பாளர்களின் வருவாய் மற்றும் லாபத்தில் அதன் தாக்கம் இன்னும் காணப்படவில்லை. டோனி ரென் தலைமையிலான Macquarie Securities இன் ஆய்வாளர்கள் 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த் பட்டியல் 300 மருந்துகளாக வளரும் என்று கணித்துள்ளனர்.
