உஷார் : தங்கம் விலை உயரப் போகுது…!
2026-இல் சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை மேலும் அதிகரித்து அவுன்ஸ் ஒன்றுக்கு $4,600–$4,800ஆக உயரும் என்று துறை சார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அவுன்ஸ் ஒன்றுக்கு $ 4,190ஆக உள்ளது.
“ரிசர்வ் வங்கிகளின் கொள்முதல், தொடரும் பணவீக்கம், அமெரிக்க நிதிப் பற்றாக்குறைகளில் விரிவாக்கம் மற்றும் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் இறக்குமதி வரிகள் பற்றிய கவலைகள் ஆகியவற்றால் 2026 இல் தங்கம் விலை $4,600–$4,800 வரம்பிற்கு உயர வாய்ப்புள்ளது” என்று தரகு நிறுவனமான வென்ச்சுரா கூறியுள்ளது.
2026-இல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் 75 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு தங்க விலைகளை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்க அதிகரிப்பு தொடரும் என நிறுவன முதலீட்டாளர்கள் நம்புவதால் அதை ஈடுசெய்ய தங்கத்தில் ஹெட்ஜை செய்து வருகின்றனர் என்றும் சில்லறை முதலீட்டாளர்களும், ஊக முதலீடுகளும் இதில் இணைந்துள்ளதால் தங்கம் விலை ஏற்றம் தொடரும் என்று வென்ச்சுரா குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த மாதம், டாய்ச்ட் வங்கி 2026-க்கான தங்கம் விலை கணிப்பை ஒரு அவுன்ஸ் $4,450 ஆக உயர்த்தியது. இது முந்தைய $4,000 இல் இருந்து அதிகரித்துள்ளது. நிலையான முதலீட்டாளர் வரவுகள் மற்றும் நிலையான மத்திய வங்கி கொள்முதல் ஆகியவற்றைக் காரணம் காட்டியிருந்தது. அடுத்த ஆண்டு தங்கம் $3,950–$4,950 வரம்பில் வர்த்தகமாகும் என்று இந்த வங்கி தற்போது எதிர்பார்க்கிறது. இதன் உச்ச வரம்பு தற்போதைய டிசம்பர் 2026 COMEX எதிர்கால விலையை விட தோராயமாக 14% அதிகமாக உள்ளது.
வலுவான மத்திய வங்கி கொள்முதல்கள் மற்றும் ETF நிறுவனங்களின் முதலீடுகள், சந்தையில் விற்பனைக்கு வரும் தங்கத்தில் பெரும் பகுதியை எடுத்துக் கொள்கின்றன. தங்கத்திற்கான மொத்த தேவை, விநியோகத்தை விட தொடர்ந்து அதிகமாக உள்ள நிலையில், நகை உற்பத்திக்கு குறைந்து அளவிலான தங்கமே கிடைக்கிறது. டாய்ச்ட் வங்கி 2027 ஆம் ஆண்டிற்கான கணிப்பை $5,150 ஆக வைத்துள்ளது.
மோர்கன் ஸ்டான்லி அதன் முந்தைய அறிக்கையில், 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு $4,500 ஆக உயரக்கூடும் என்று கணித்திருந்தது.
