பொழுதுபோக்குத்துறையில் பெரிய டீல்..!!
புகழ்பெற்ற ஹாலிவுட் சினிமா தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை, ஒ.டி.டி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், வார்னர் பிரதர்ஸ் பங்குதாரர்கள், ஒரு பங்கிற்கு $27.75 ரொக்கமாகவும், நெட்ஃபிளிக்ஸ் பங்குகளாகவும் பெறுவார்கள். ஒப்பந்தத்தின் மொத்த பங்கு மதிப்பு $7,200 கோடியாகவும், அதே நேரத்தில் நிறுவன மதிப்பு சுமார் $8,270 கோடியாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை முடிவதற்கு முன்பு, வார்னர் பிரதர்ஸில் இருந்து CNN, TBS மற்றும் TNT உள்ளிட்ட கேபிள் சேனல்கள் தனியாக பிரிக்கப்பட உள்ளன.
இந்த கையகப்படுத்தல் நெட்ஃபிளிக்ஸுக்கு ஒரு பிரம்மாண்டமான முன்னேற்றத்தை குறிக்கிறது. பழைய படங்களுக்கான காப்புரிமைகள் அல்லது ஒரு சினிமா ஸ்டுடியோ போன்ற எதுவும் இல்லாமல், மற்றவர்களிடமிருந்து நிகழ்ச்சிகள், படங்களுக்கு உரிமம் வழங்கி, பின்னர் சொந்த தயாரிப்புகளை முன்னெடுத்து, பின்னர் ஹாலிவுட்டின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக நெட்ஃபிளிக்ஸ் வளர்ந்தது.
இந்த கொள்முதல் மூலம் நெட்ஃபிளிக்ஸ் HBO நெட்வொர்க்கின் உரிமையாளராகிறது. அதன் தி சோப்ரானோஸ் மற்றும் தி ஒயிட் லோட்டஸ் போன்ற ஹிட் நிகழ்ச்சிகளை பெறுகிறது. வார்னர் பிரதர்ஸ் சொத்துக்களில் கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள அதன் பரந்த ஸ்டுடியோக்களும், ஹாரி பாட்டர் அண்ட் பிரண்ட்ஸ் உள்ளிட்ட ஒரு பெரிய திரைப்பட, தொலைக்காட்சி காப்பகமும் அடங்கும்.
பார்வையாளர்கள் நெட்ஃபிக்ஸ் ஆதிக்கம் செலுத்தும் உலகமான ஸ்ட்ரீமிங்கிற்கு மாறுவதால் பாரம்பரிய டிவி வணிகம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. சமீபத்திய காலாண்டில், வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தாக்களை ரத்து செய்ததாலும், விளம்பரதாரர்கள் வேறு இடங்களுக்குச் சென்றதாலும், வார்னர் பிரதர்ஸின் கேபிள் டிவி நெட்வொர்க்குகள் பிரிவு 23 சதவீத வருவாய் சரிவை அறிவித்தது.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் மூலம் டிஸ்க்குகளை அனுப்பும் டிவிடி வாடகை நிறுவனமாக நிறுவப்பட்ட நெட்ஃபிக்ஸ், 2024-ஐ $3,900 கோடி வருவாயுடன் முடித்தது. 1920களில் நிறுவப்பட்ட வார்னர் பிரதர்ஸ், $3,900 கோடிக்கும் அதிகமான விற்பனையைக் கொண்டிருந்தது.
வார்னர் பிரதர்ஸின் புகழ்பெற்ற படங்கள் மற்றும் இதர தயாரிப்புகளை கையகப்படுத்தியதன் மூலம், வால்ட் டிஸ்னி மற்றும் பாரமவுண்ட் போன்ற போட்டியாளர்களை, நெட்ஃபிளிக்ஸ் எளிதாக விஞ்ச முடியும். அதே நேரம், இந்த ஒப்பந்தம் நிச்சயமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏகபோக தடுப்பு சட்டத்தை எதிர்கொள்ளும் என்று கருதப்படுகிறது.
