பிரேசிலில் ரூ.330 கோடி முதலீடு செய்யும் டி.சி.எஸ்
முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), பிரேசிலின் லோன்ட்ரினாவில் 3.7 கோடி டாலர் (₹330 கோடி) முதலீட்டில் ஒரு சேவை மையத்தை அமைப்பதாக அறிவித்தது. 2027-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய வளாகம், பிரேசிலிலேயே மிகப்பெரியதாக இருக்கும்.
இது 1,600-க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், பிரேசில் மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு strategy மையமாகவும் இது செயல்படும். இது லத்தீன் அமெரிக்காவில் டிசிஎஸ் செய்துள்ள மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும், இது அந்த பிராந்தியத்தின் மீதான அதன் நீண்ட கால அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
பலேசியோ இகுவாசுவில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், பிரேசிலின் பரானா மாகாண ஆளுநர் கார்லோஸ் ரொபெர்டோ மாசா ஜூனியர் மற்றும் டிசிஎஸ் பிரேசில் நாட்டுத் தலைவர் புருனோ ரோச்சா ஆகியோர் கலந்துகொண்டனர்.
“இந்த புதிய முதலீடு, பரானாவை பிரேசிலில் உள்ள முக்கிய தகவல் தொழில்நுட்ப சேவை மையங்களில் ஒன்றாக மாற்றும். மாநில அரசு தகுதிவாய்ந்த பயிற்சிகளில் ஆரம்பம் முதலே அதிக முதலீடு செய்கிறது,” என்று ஜூனியர் கூறினார்.
இந்த புதிய மையம், தற்போதுள்ள பணியாளர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க உதவும். மேலும், புதிதாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கும் இடமளிக்க கூடுதல் வசதியை வழங்கும். டிசிஎஸ்-க்கு சொந்தமான இந்த புதிய மையம், ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கத்திற்கான ஒரு மையமாக செயல்படும். இது செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, ஈஆர்பி தீர்வுகள் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் வணிக மாற்றத்தை செயல்படுத்தும்.
டிசிஎஸ் நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரேசிலில் செயல்பட்டு வருகிறது. லோன்ட்ரினா, சாவோ பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களில் அதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன. வங்கி, காப்பீடு, சுரங்கம், சுகாதாரம், உற்பத்தி, சில்லறை வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் பிரேசிலில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இது சேவை வழங்கி வருகிறது.
