ஒரு டேங்கர் தண்ணீர் 5 ஆயிரம் ரூபாய்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. பல டெக் நிறுவனங்களுக்கு தாய் வீடாக உள்ள பெங்களூரு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. கர்நாடக தலைநகரில் ஏகப்பட்ட டெக் நிறுவனங்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு போதுமான தண்ணீர் வசதி கேள்விக்குறியாகி உள்ளது. ஏராளமான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் ஒர்க் ப்ரம் ஹோம் வசதியை அளித்துள்ளது. ஏராளமான பணியாளர்கள் தண்ணீரைப் பிடிப்பதற்காகவே வேலையை விட்டு காத்திருக்கும் சூழலும் நிலவுகிறது.
ஒரு காலத்தில் சில அடிகளிலேயே இருந்த நிலத்தடி நீர் தற்போது மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு நிறுவனங்களும் தயாராகி உள்ளன. டெக் நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட பல நிறுவனங்களின் பணியாளர்களும் இதனால் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் சரிந்து விட்ட நிலையில் பல்வேறு பிரச்சனைகளும் இதன் பின்னால் ஒளிந்திருக்கின்றன. அசுர வேகத்திலான நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் பெங்களூரு நகரின் மக்கள் தொகையும் இதற்கு முக்கியமான காரணிகளாக உள்ளன. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளையும் பெங்களூர் மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது. விரிவடைந்து வரும் நகரத்தின் அளவு இந்த தண்ணீர் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. தண்ணீரை சேமிப்பதற்காகவும் தற்போதைய தண்ணீர் சிக்கலை சமாளிப்பதற்காகவும் கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது குறிப்பாக வறண்டு விட்ட ஏரிகளில் தினசரி ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை ஊற்றிவிடும் நிகழ்வுகளையும் கர்நாடக அரசு செய்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு மிக குறைந்த நாட்களே உள்ள நிலையில் கர்நாடக தண்ணீர் பிரச்சினை தேசிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. வீடுகளில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் மக்கள் தடுமாறி வருகின்றனர். கோடையே இன்னும் ஆரம்பிக்காத நிலையில் தற்போதே தண்ணீர் பிரச்சனை மிகப் பெரிய அளவில் கர்நாடக அரசியலை உலுக்கி வருகிறது. வசதி படைத்தோர், தண்ணீர் இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள தண்ணீர் நிறுவனங்களில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் நிலவுகிறது. ஒரு டேங்கர் தண்ணீர் வழக்கமாக 2500 ரூபாயாக இருக்கும் நிலையில் தற்போது இந்த சூழலை பயன்படுத்தி ஐந்தாயிரம் ரூபாயாக ஒரு டேங்கர் தண்ணீர் விற்பனை ஆகிறது. இயற்கை தரும் மழையை முறையாக சேமித்து வைக்காததே இந்த பிரச்சனையை கர்நாடகா சந்திக்க முக்கிய காரணமாக உள்ளது.