வேதாந்தாவுக்கு மானியமே 80 ஆயிரம் கோடியா ????
இந்தியாவில் செமி கண்டெக்டர்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பெரிய அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தைவான் நிறுவனமான பாக்ஸ்கானுடன் இணைந்து வேதாந்தா நிறுவனம் குஜராத்தில் செமி கண்டெக்டர் ஆலையை நிறுவுகிறது. இந்த நிலையில் வேதாந்தா குழுமத்துக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக கிடைப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் 80 ஆயிரம் கோடி ரூபாயை உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையாக அளிப்பது இலவசம் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இதேபோல் மானியம் அளித்தால் அமெரிக்காவை விட அதிக மானியம் அளிக்கும் நாடாக இந்தியா திகழும் என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய செமி கண்டெக்டர் ஆலைகள் நேரடியாக வேலைவாய்ப்பு அளிக்குமா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக உள்ளது. சிப் உற்பத்தியில் அதிகம் ரோபோக்கள் தான் பயன்படுத்தப்பட உள்ள நிலையில் இந்த தொழிலில் இந்தியா அவசரம் காட்டவது சரியாக இருக்காது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்
மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்துக்கு ஓராண்டுக்கு அளிக்கப்படும் தொகையான 73 ஆயிரம் கோடி ரூபாயைவிட ஒரே ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு 80 ஆயிரம் கோடி ரூபாயை இலவசமாக அளிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் அந்த கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளது. உலகளவில் அதிக சிப் தயாரிக்கும் அமெரிக்கா, சீனா, தைவானை விட இங்கு அதிக சலுகைகள் அளிக்கப்படுவதாகவும் அந்த கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.குஜராத்தில் தேர்தல் வர உள்ள நிலையில் அந்த மாநிலத்துக்கு வரும் ஒரு ஆலைக்கு இத்தனை பெரிய தொகையை மானியமாக அளிப்பதா என்ற அரசியல் ரீதியிலான கேள்வியையும் அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது