பிரச்சனையை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய உத்தி..
உலகளவில் பொருளாதார சமநிலை நிலவி வரும் நிலையில் அதில் இருந்து பாதுகாக்கும் வகையில் புதிய உத்திகளை ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளது. சந்தை ஏற்றத்தாழ்வுக்கு ஏற்றபடிதான்இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கத்தை சந்திப்பதாக ரிசர்வ் வங்கி கூறி வருகிறது. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கேல் பாத்ரா தலைமையிலான ரிசர்வ் வங்கியின் மாதாந்திர செய்திக்குறிப்பில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியிடம் தற்போது வரை 700 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளது. போதுமான பண கையிருப்பு இருப்பதால் தான் இந்தியாவின் பண மதிப்பு பெரிய பாதிப்பை சந்திக்காமல் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி விளக்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நடப்புக் கணக்கு, மூலதன நிதி ஆகியவற்றை கணக்கில் கொண்டுதான் பண கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவே கடினமான தருணங்களை சமாளிக்க உதவுவதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் சாமர்த்தியமான முயற்சிகளால்தான், வணிக போட்டிகளை சமாளிக்க முடிவதாகவும், தரம் மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதியில் இந்தியா சிறந்து விளங்க முடிவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒன்றரை விழுக்காடு வரை வீழ்ச்சியை கண்டுள்ளது. இதுவே ஆசியாவில் வீழ்ந்த மிகக்குறைந்த பணத்தின் மதிப்பாகும். உலகளவில் பெரிய சிக்கல்கள் நிலவியபோதும், பணத்தின் மதிப்பு பெரிய பாதிப்பை சந்திக்கவில்லை என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.