வலுவடையும் டாலர், தொடர்ந்து தேயும் இந்திய ரூபாயின் மதிப்பு..
அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுத்து வரும் நடவடிக்கைகளால் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்துள்ளது
இதுவரை இல்லாத உச்சமாக 81 ரூபாயை கடந்து ரூபாய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் வரும் நாட்களில் 83 ரூபாய் வரை மேலும் சரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்திய ரூபாயின் மதிப்பு 9 விழுக்காடு இந்தாண்டில் சரிவை கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான குறியீடு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 114.764 புள்ளிகளாக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ந்து வருவது இந்திய ரூபாய் மதிப்பை ஓரளவு மீட்டுள்ளது. இந்தியாவில் வங்கிகளுக்கும், வங்கிகள் பொதுமக்களுக்கும் அளிக்கும கடன்களின் விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிய அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் மந்தநிலை காரணமாக அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்துள்ளது இந்திய ரூபாய் மட்டுமின்றி ஆசிய சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ள ரெபோ விகிதம் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பையே எதிர்நோக்கியுள்ளனர்