சிமென்ட்டைத் தொடர்ந்து புதிய துறையில் அதானி..
துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் ஆற்றல்துறையை கையில் வைத்துள்ள கவுதம் அதானி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் துறையில் கால்பதித்தார். அம்புஜா மற்றும் ஏசிசி சிமென்ட் நிறுவனங்களை அதானி வாங்கியிருந்தார்.
ஆதித்யா பிர்லா குழுமம் சிமென்ட் துறையில் முதலிடத்தில் இருக்கும் நிலையில், இரண்டாவது இடத்தை கவுதம் அதானி பிடித்துள்ளார். சிமென்ட் துறையைத் தொடர்ந்து செம்பு துறையிலும் அதானி தற்போது கால்பதித்துள்ளார். இந்தியாவின் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் துறையில்செம்பின் பங்கு மிக முக்கியமான இடம் வகிக்கிறது . குஜராத்தின் முந்த்ரா பகுதியில் செம்பு சுத்தீகரிப்பு ஆலையை அதானி கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கினார். கட்ச் காப்பர் என்ற நிறுவனத்தை வாங்கிய அதானி, ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். 10லட்சம் டன் செம்பு கம்பிகளை உற்பத்தி செய்ய இரண்டு கட்டங்களாக பணிகள் நடக்கின்றன. வரும் 2029 ஆம் ஆண்டுக்குள் இரண்டு கட்டங்களையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிமென்ட் துறையில் ஆதித்யா பிர்லா குழுமத்துடன் போட்டியிடும் அதானி, மீண்டும் செம்பு துறையிலும் ஹிண்டால்கோ நிறுவனத்துடன் போட்டியிடுகிறார். உலகளவில் ஒரு நபருக்கு சராசரியாக 3.2கிலோ செம்பு தேவைப்படுகிறது. இந்தியாவில் இது 0.6கிலோகிராமாக குறைந்துள்ளது. எனினும் மின்சார வாகனங்களில் காப்பர் பங்கு மிகவும் முக்கியமானதாகும். 2030ஆம் ஆண்டுக்குள் செம்பின் தேவை இருமடங்காகவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு 18 ஆண்டுகளில் முதல் முறையாக செம்பை இந்தியா இறக்குமதி செய்கிறது. கடந்த 2022-23 காலகட்டத்தில் மட்டும் 27,131 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்பை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. 2022-ல் 13.11லட்சம் டன்னாக இருந்த இந்தியாவின் செம்பின் தேவை, கடந்தாண்டு 15.22லட்சம் டன்னாடக உயர்ந்துள்ளது. படிம எரிபொருளில் இருந்து மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறும்போது, செம்பின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் செம்பின் விலையும் அதிகரிக்கிறது. சீனாவிலும் இதற்கான தேவை அதிகரிக்கும் இந்த நிலையில் கவுதம் அதானி இந்த புதிய ஆலையை திறக்க இருக்கிறார்.