கூட்டு நிறுவனத்தில் இருந்து விலக அலியான்ஸ் நிறுவனம் திட்டம்…
பஜாஜ் நிறுவனமும் அலியான்ஸ் நிறுவனமும் இணைந்து தற்போது வரை காப்பீட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்த நிலையில், பார்ட்னர்ஷிப்பில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அலியான்ஸ் நிறுவனம் வெளியேற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் நிறுவன பங்குகளை உயர்த்த பஜாஜ் நிறுவனம் அனுமதிக்கவில்லை என்று அலியான்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது. 20 ஆண்டுகள் உறவை இரு நிறுவனங்களும் முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஜாஜ் உடன் உள்ள உறவுகளை முடித்துக்கொண்டு இந்தியாவில் வேறொரு நிறுவனத்துடன் கைகோர்க்கவும் அலியான்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது வரை பஜாஜ் அலியான்ஸ் கூட்டு நிறுவனத்தில் பஜாஜ் நிறுவன பங்குகள் மட்டும் 74% உள்ளன. மீதமுள்ளவை அலியான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை. ஜெர்மனியின் மியூனிச் நகரை தலைமை இடமாகக் கொண்டு அலியான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. கூட்டு நிறுவனத்தில் இருந்து பிரச்சனைகள் ஏதுமின்றி வெளியேறும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் 3 ஆவது பெரிய காப்பீட்டு நிறுவனமாக உள்ள பஜாஜ் அலியான்ஸ் நிறுவனம், இந்தியாவில் வேகமாக வளரும் நிறுவனமாக திகழ்ந்தது. இதன் கூட்டு சொத்துமதிப்பு மட்டும் 1 டிரில்லியன் ரூபாய் என்று கடந்த மார்ச் இறுதியில் மதிப்பிடப்பட்டது குறிப்பிடவேண்டும்