அசத்திய டாடா மோட்டார்ஸ்..
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் தனது வணிகத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்க இயக்குநர்கள் குழு இசைவு தெரிவித்திருந்ததது. இதன் ஒரு பகுதியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 8 விழுக்காடு வரை உயர்ந்தன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆயிரம் ரூபாய் என்ற மயில்கல்லை கடந்து ஆயிரத்து 65 ரூபாய் என்ற அளவில் பங்குகள் விலை முடிந்தது.
திங்கட்கிழமை இதற்கான இசைவு கிடைத்தது. வணிக பயன்பாட்டு பிரிவு தனியாகவும், பயணிகள் வாகன பிரிவு தனியாகவும் அதில் மின்சார வாகனம் மற்றும் ஜாக்குவார் லாண்ட் ரோவர் மற்றும் அது சார்ந்த முதலீடுகள் தனிப்பிரிவாகவும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த நிறுவனங்கள் தனித்தனியாக செயல்பட்டு வந்த போதிலும் அதற்கான அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் இந்த முயற்சி மிகவும் சமயோசிதமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஹியூண்டாய்,மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் பயணிகள் வாகன பிரிவில் கடுமையான போட்டி ஏற்படுத்தியுள்ளது. வணிக பயன்பாட்டு பிரிவு வாகனங்களை பொருத்தவரையில் அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு நேர் போட்டியாளராக டாடா மோட்டார்ஸ் கருதப்படுகிறது. கடந்த ஓராண்டாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சீராக உயர்ந்து வருகிறது. ஜாக்குவார் லேண்ட் ரோவர் பிரிவில் நல்ல முன்னேற்றம் நிலவுகிறது.
2023 ஆம் ஆண்டில் மட்டும் 101 விழுக்காடு அதிக வளர்ச்சியை அந்நிறுவனம் பெற்றுள்ளது. கடந்தாண்டு மே 20ஆம் தேதி வெறும் 79 ரூபாயாக இருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் 1193 விழுக்காடு உயர்ந்து ஒரு பங்கின் விலை ஆயிரத்து 30 ரூபாயாக அதிகரித்து பிரமிக்க வைத்தது. கடந்த 11 மாதங்களில் 9 மாதங்கள் இந்த பங்குகள் உயர்வில் முடிந்துள்ளன. 145 விழுக்காடு அளவுக்கு ரிட்டர்ன்சை அந்நிறுவனம் பெற்றுள்ளது.