வாரத்தில் 5 நாள் ஆபிஸ் வந்தே ஆகணும்..
பிரபல அமெரிக்க நிறுவனமான அமேசான் தனது பணியாளர்கள் வாரத்தில் 5 நாட்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் அவர்கள் வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை அந்நிறுவனத்தின் வெப் சேவைகள் பிரிவு தலைமை செயல் அதிகாரி மாட் கார்மன் கடுமையாக அமல்படுத்தி வருகிறார். நிறுவனத்தின் இலக்கை நோக்கி பயணிக்க பணியாளர்கள் கட்டாயம் நேரில் வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதில் விருப்பம் இல்லாதவர்கள் வேறு நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்ளுங்கள் என்றும் தடால் அடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வாரத்தில் 5 நாட்கள் அலுவலகம் வந்தே ஆகவேண்டும் என்ற அறிவிப்பு தேவையற்ற பயணத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். தேவை இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை அமேசான் நிறுவனம் வழங்கட்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூகுள், மெட்டா, மைக்ரோசோஃப்ட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வாரம் இரண்டு அல்லது 3 நாட்கள் மட்டுமே அலுவலகம் வரச் சொல்லியிருக்கும் நிலையில் அமேசான் நிறுவனம் மட்டும் 5 நாட்கள் கட்டாயம் வரச் சொல்லியிருப்பது பலருக்கு வேதனையளித்துள்ளது.
உலகிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமான அமேசானில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது உலகளவில் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.