தமிழ்நாட்டில் ஆலை தொடங்கும் அம்பானி..
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி பேசினார். தமிழ்நாடு அரசுடன் நெருக்கமாக பழகி தமிழ்நாட்டில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்துறையில் முதலீடுகள் செய்ய இருப்பதாக அறிவித்தார். கடந்தாண்டு பிப்ரவரியில் ரிலையன்ஸ் நிறுவனம் அசோக் லேலாண்ட் உடன் இணைந்து ஹைட்ரஜனில் இயங்கும் சரக்கு லாரியை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே ஹைட்ரஜனில் இயங்கும் பேருந்தை ரிலையன்ஸ் மற்றும் ஓலெக்ட்ரா கிரீன்டெக் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து காட்சிபடுத்தியது. இது மட்டுமின்றி பாரத் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹைட்ரஜன் பியூல் செல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னெடுப்புகளுக்கு தமிழ்நாடு அரசு உதவும் என்று தாம் நம்புவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 1,300 ரீட்டெய்ல்கடைகளை திறந்திருப்பதாகவும் ஏற்கனவே 35,000 கோடி ரூபாய்க்கு ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திருப்பதாகவும் அம்பானி தெரிவித்தார். ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் தரவு மையத்தை அடுத்தவாரம் திறக்க இருப்பதாகவும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.