அன்னா உயிரிழப்பு- EY விளக்கம் என்ன?
26 வயதான பட்டய கணக்கரான அன்னா செபாஸ்டியன், அண்மையில் திடீரென உயிரிழந்தது இந்திய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Ernst &young நிறுவனத்தில் பணியாற்றிய அவர் பணி அழுத்தம் காரணமாக உயிரிழந்ததாக அவரின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில் அன்னாவின் மறைவுக்கு அவர் வேலை பார்த்த நிறுவனம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது. இந்தாண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி பணியில் சேர்ந்த அவர், 4 மாதங்களில் உயிரிழந்திருப்பது ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எத்தனை பணம் கொடுத்தாலும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளது. எனினும் தங்கள் நிறுவனம் அன்னாவின் குடும்பத்துக்கு செய்ய முடிந்த உதவிகளை செய்யும் என்றும் அறிவித்துள்ளது. பணிக்கு சேர்ந்த அன்னாவுக்கு வீட்டுக்கு வந்தாலும் வேலை பளு அதிகளவில் இருந்துள்ளது. இந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. இந்த பிரச்சனை தேசிய அளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. வேலை நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இந்தியாவில் பணி நேரத்தை முறையாக ஆய்வு செய்யவும் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்னா உயிரிழந்த நிலையில் EY நிறுவனத்தில் இருந்து ஒரு நபர் கூட மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.