சலுகைகளை அள்ளி வீசும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்..

இந்தியாவில் பயணிகள் வாகனங்கள் எனப்படும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கான தேவை கடந்த பிப்ரவரியில் மிகவும் குறைவாக கணப்பட்டது. இதனால் இருக்கும் கார்களை எப்படியாவது விற்றுவிடவேண்டும் என்ற நோக்கில், ஏராளமான சலுகைகளை கார் தயாரிப்பு நிறுவனங்கள் அளிக்க உள்ளன. கடந்த ஜனவரியில் விலைகளை உயர்த்தியதால் மக்கள் கார்களை வாங்கும் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்களை கார் வாங்க வைக்க 2 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை டிஸ்கவுன்ட்களை அள்ளி வீச நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. பங்குச்சந்தைகளில் சரிவு, கார் முன்பதிவு குறைந்ததும் மந்த நிலைக்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. சில நிறுவனங்கள் இந்த நிலையை மாற்ற 2,500 முதல் 75,000 ரூபாய் வரை கூட சலுகைகளை அளிக்க முன்வந்துள்ளன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக FADA அமைப்பின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பணம் தள்ளுபடி, எக்ஸ்சேஞ், சில வாடிக்கையாளர்களுக்கு இலவச பரிசுகள் அளிக்கவும் கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
ஷோரூம்களிலேயே அதிகளவு கார்கள் தங்கியிருக்கும் சூழலும் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் கடந்த பிப்ரவரியில்தான் மிகவும் மோசமான கார் விற்பனை நடந்ததாக நோமுரா என்ற நிறுவனம் கூறியுள்ளது. அந்த நிறுவன அறிக்கையின்படி கார் விற்பனை 14 %, இருசக்கர வாகன விற்பனை 12% டிரக்குகளின் விற்பனை 11% சரிந்துள்ளதாம். கடந்த ஜனவரியில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் 3 விழுக்காடு வரை கார்களின் விலைகளை உயர்த்தியிருந்தன. இதனால் மக்கள் அதிகளவில் கார்களை வாங்கஆர்வம் காட்டவில்லை. இதனை போக்க கடந்தாண்டு அளிக்கப்பட்ட அதிகபட்ச டிஸ்கவுன்டான 70,000 ரூபாய் வரையிலான தொகையை மேலும் அதிகரிக்க கார் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.