ஆரம்ப பங்குகளை வெளியிடும் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ்..
பஜாஜ் பைனான்சின் வீட்டுக்கடன் பிரிவான, பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் , தனது ஆரம்ப பங்குகளை வெளியிட முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் 56,000 முதல் 59 ஆயிரம் கோடி ரூபாய் வரை சந்தை மதிப்பீட்டு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த ஆரம்ப பங்கு வெளியீடு என்பது செப்டம்பர் முதல் பாதியிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜுன் மாதம் செபியிடம் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஐபிஓவுக்கான விண்ணப்பங்களை செய்திருந்தது. அதில் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இந்த மாத இறுதியில் ஐபிஓ வெளியிட செபி இசைவு தெரிவித்திருந்தது. எனினும் இந்த அளவானது 6,300 முதல் 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாள் முடிவில் பஜாஜ் பைனான்சின் சந்தை மூலதனம் 4லட்சம் கோடி ரூபாயாகவும், பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.46 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றி நிதி திரட்டப்படுகிறதா என கண்காணிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. புனேவை அடிப்படையாக கொண்டு இயங்கும் பஜாஜ் வீட்டுக்கடன் பிரிவு 7கோடியே 65லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சொத்துகள் மட்டும் 91,370 கோடி ரூபாயாக உள்ளது. இது 32 விழுக்காடு வளர்ச்சியாகும். ஒரு பங்கின் விலை 550 ரூபாயில் இருந்து 570 ரூபாய் வரை இருக்கலாம் என்று பஜாஜ் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.