பைஜூஸ்க்கு எதிராக திவால் நோட்டீஸ்..
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கே ஸ்பான்சர்கள் அளித்து வந்த பைஜூஸ் தற்போது கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது. இந்த நிலையில் பைஜூஸ் வியாபார விரிவாக்கத்துக்கு கடன் அளித்த வெளிநாட்டினர் தற்போது அந்நிறுவனத்துக்கு எதிராக இந்தியாவில் திவால் நோட்டீஸ் அளித்துள்ளனர். மொத்தம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களில் 85 விழுக்காடு கடன் வெளிநாட்டினர் அளித்தது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் பெங்களூரு கிளையில் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. கடன் தொடர்பாக ஏற்கனவே தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துவிட்டதாக கூறியுள்ள பைஜூஸ் நிறுவனம், இது தொடர்பான வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஜூலையில் பைஜூஸ் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது. அதில் வாங்கிய கடனை எப்படியாவது அடைக்க கெடு கேட்கப்பட்டது. சட்ட நிறுவனம் ஒன்றை ஆலோசனை நிறுவனமாக எடுத்து அதன் பிறகு பிரச்சனைகளை தீர்க்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால் நிதானம் இழந்த வெளிநாட்டு நிறுவனங்கள், பலமுறை நோட்டீஸ் அளித்தும் பைஜூஸ் செவி சாய்க்காததால் வேறு வழியின்றி தற்போது நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நோட்டீஸ் தொடர்பாக மனு அளித்துள்ளனர். கடந்த செப்டம்பரில் கொஞ்சம் பணத்தை TLBஎன்ற வகை பணத்தில் முதலீடு செய்திருப்பதாக பைஜூஸ் கூறியிருந்தது. கடன் கொடுத்துவிட்டு விதிகளை மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நியூயார்க்கில் பைஜூஸ் நிறுவனம் வழக்கும் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.