வேலை போயிடும் ஜாக்கிரதை..!!!!
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் அதே காலகட்டத்தில், இரண்டாவதாக ஒரு பணியை செய்வது மூன்லைட்டிங் எனப்படுகிறது. இது பல நிறுவனங்களில் இயல்பாக நடக்கும் செயலாக உள்ளது. கூடுதல் வருவாய்க்காக, ஓய்வாக இருக்கும் நேரத்தில் இரண்டாவதாக ஒரு வேலையை செய்வதை பல ஊழியர்களும் விரும்புகின்றனர். இந்த சூழலில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் இன்போசிஸில் பணியில் இருக்கும் அதே காலகட்டத்தில், இரண்டாவதாக ஒரு வேலையை கூடுதலாக செய்வது இன்போசிஸ் நிறுவன விதிகளுக்கு எதிரானது என்றும், அவ்வாறு செய்வது இன்போசிஸில் பணித் திறனை குறைக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய மூன்லைட்டிங் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் வரை செய்ய வாய்ப்புள்ளதாக அந்த மின்னஞ்சலில் எச்சரித்துள்ளது. எனினும் இந்திய அரசியமலைப்புச் சட்டம் 21ம் அம்சத்தின்படி வாழ்வாதாரத்துக்கு ஒரு குடிமகன் எதை வேண்டுமானாலும் செய்வதில் தவறில்லை என்பதை ஐடி ஊழியர்கள் சங்கம் முன்வைக்கிறது. இத்தகைய மின்னஞ்சல் அனுப்புவதே இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சட்டவிரோதம் என்பது ஐடி ஊழியர்களின் வாதமாக உள்ளது.