குளிர்பான சந்தையில் உச்சம் தொடுவாரா அம்பானி?
1970-80களில் பெப்சி மற்றும் கொக்க கோலா நிறுவனங்களுக்கு இடையே அமெரிக்காவில் நிலவிய போட்டியைப்போல தற்போது இந்தியாவிலும் குளிர்பான விற்பனையில் கடும் போட்டி நிலவுகிறது. அமெரிக்காவில் நடந்த விளம்பர உத்தி பெரிய அளவில் பேசப்பட்டாலும் இந்தியாவில் விலை என்ற ஒற்றை அம்சம்தான் சந்தையை தீர்மானிக்கிறது. மேற்குவங்கம், ஒடிசா, உத்தரபிரதேச மாநிலங்களில் பெப்சி ,கொக்க கோலா நிறுவனங்களின் விலையில் பாதி விலையில் கேம்பா கோலா விற்கப்படுகிறது. போட்டிக்காக இல்லாமல், வாடிக்கையாளர்களின் நலனுக்காக ரிலையன்ஸ் காய் நகர்த்தி வருகிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே தொலைதொடர்புத்துறையில் இருந்தாலும், ஜியோ என்ற பிராண்டை அறிமுகப்படுத்தி பெரிய புரட்சியை ஏற்படுத்திய முகேஷ் அம்பானி, இந்தியாவில் குளிர்பான சந்தையிலும் புரட்சியை செய்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகின் மிகப்பெரிய சொத்து நிர்வகிக்கும் நிறுவனத்துடன் இணைந்து நிதி சேவைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது ஜியோ. துணி சோப்புகள், துணி சலவை பவுடர்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி அதிலும் ஜியோ வெற்றி கண்டது. டெலிகாம் துறையைத் தொடர்ந்து மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் நிறுவனமான வைசர் என்ற பிராண்டை தொடங்கி அதிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். பல துறைகளில் சாதனைகளை படைத்த முகேஷ் அம்பானி, 50 ஆண்டுகள் பழமையான கேம்பா கோலாவை 22 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்திய தயாரிப்புகளை சந்தை படுத்த அம்பானி பெரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். 2024 நிதியாண்டில், ரிலையன்ஸ் வாடிக்கையாளர் தயாரிப்பு நிறுவனமான RPCL நிறுவனம், 3,000 கோடி ரூபாய் விற்பனை செய்துள்ளது. அதில் 400 கோடி ரூபாயை கேம்பா கோலா மட்டுமே வசூலித்துள்ளது.
பெப்சி கொக்க கோலா நிறுவனங்களின் 250 மில்லி குளிர்பானங்கள் 20 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், கேம்பா குளிர்பானம் 10 ரூபாய்க்கும், அரைலிட்டர் குளிர்பானம் 500 மில்லி பாட்டில் 20 ரூபாய்க்கு கிடைக்கிறது. குளிர்பான சந்தையில் விலை குறைப்பின் மூலம், பெரிய நிறுவனங்களையும் விலை குறைக்க வைக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.