12லட்சம் கோடி ரூபாய் இழப்பு..

இந்திய பங்குச்சந்தைகளில் 10 மாதங்களில் இல்லாத வகையில் கடும் வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்களுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை கடந்த வாரத்தில் அமெரிக்காவில் அறிவித்தார்.அமெரிக்க பங்குச்சந்தைகளில் இதனால் கடும் வீழ்ச்சி காணப்பட்டது..வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை , வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆயிரத்து நூறு புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. பிற்பகலில் ஓரளவுக்கு சரிவில் இருந்து இந்திய சந்தைகள் மீண்டாலும் பாதிப்பு அதிகமாக இருந்தது. சென்செக்ஸ் 2ஆயிரத்து227 புள்ளிகள் சரிந்து 73ஆயிரத்து 138 புள்ளிகளாகவும், நிஃப்டி 743 புள்ளிகள் குறைந்து 22ஆயிரத்து162 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. நேற்று ஒரே நாளில் டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் 1லட்சத்து 28ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தன. டிரென்ட், ஹிண்டால்கோ, L&T நிறுவன பங்குகள் பெரியளவில் வீழ்ந்தன. zomato, இந்துஸ்தான் யுனிலிவர் ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. Hindustan Copper, Sammaan Capital, Bharat Forge, DLF உள்ளிட்ட 770 நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத சரிவை கண்டன. ஆசிய பங்குச்சந்தைகளில் கடந்த 16ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் சரிவு காணப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் புதுப்புது உச்சங்களை தொட்டு வந்த தங்கம் விலை, நேற்று சவரனுக்கு 200ரூபாய் குறைந்து 66 ஆயிரத்து 280 ரூபாயாக சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 25ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 8285 ரூபாயாகவும், வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 103 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும்.