சீனாவின் அதிரடி திட்டம்…

கொரோனா பரவலால் சுத்தமாக வீழ்ந்துபோன சீன பொருளாதாரத்தை மீட்க அந்நாட்டு அரசு புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. வங்கிகளுக்கான ரிசர்வ் விகிதத்தை வரும் பிப்ரவரி 5 ஆம் தேதியில் இருந்து 50 புள்ளிகளை குறைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியால் வங்கிகளுக்கு 1 டிரில்லியன் யுவான் அளவுக்கு நிதி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வருங்காலங்களில் இன்னும் கூட,வட்டி விகிதங்கள் எளிமையாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டே இரு முறை கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட்டன. அந்நாட்டில் மோசமாக வீழ்ந்துள்ள ரியல் எஸ்டேட் துறையை சீரமைக்க சிறப்பு திட்டம் ஒன்றும் தயாராகி வருவதாக அந்நாட்டு பொதுத்துறை வங்கியின் மூத்த ஆளுநர் பான் தெரிவித்துள்ளார். சீன பங்குச்சந்தையில் கடைசி நேர வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றமும் காணப்பட்டது. வழக்கமாக இந்த மாதிரியான அறிவிப்புகளை ஆன்லைனில் மட்டுமே வெளியிட்டு வந்த சீன அரசு அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரியே அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதாக வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்தாண்டு 5.2 விழுக்காடாக இருந்தது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள இடைவெளி இந்தாண்டு குறைய வாய்ப்பிருப்பதாகவும் பான் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. பணத்தின் நிலைத்தன்மையை சரி செய்யவும், பண மதிப்பு மீட்கும் நடவடிக்கையையும் கருத்தில் கொள்வதாக பான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
