காக்னிசன்ட் பில்டிங் விற்கப்பட்டது..

சென்னையின் பிரதான ஐடி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் காக்னிசன்ட், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் இருந்த தனது அலுவலகத்தை பெரிய தொகைக்கு விற்றுவிட்டது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிடிஎஸ் நிறுவனத்துக்கு 13.68 ஏக்கர் அளவில் ஓஎம்ஆர் சாலையில் சொந்த கட்டடம் இருந்தது. இதனை 612 கோடி ரூபாய்க்கு அந்நிறுவனம் விற்றுள்ளது. நீலாங்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இந்த அலுவலக பதிவு நடந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக சிடிஎஸின் தலைமை அலுவலகமாக திகழ்ந்த இந்த நிறுவன அலுவலகத்தில்தான், அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் காக்னிசன்ட் பட்டியலிடப்பட்டது. துரைப்பாக்கத்தில் உள்ள கட்டடத்தை விற்ற நிலையில் மெப்ஸ், சோழிங்கநல்லூர், சிறுசேரியில் உள்ள சொந்த கட்டடங்களில் பணிகளை மேற்கொள்ள பணியாளர்களுக்கு ஆணையிட்டுள்ளது. துரைப்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தை வாங்க சென்னையின் பிரதான நிறுவனங்களான பாஷ்யம், காசா கிரான்ட் ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டின, பெங்களூருவைச் சேர்ந்த பாகமானே குழுமமும் ஆர்வம் காட்டியது. தமிழ்நாடு அரசுக்கு பத்திரப் பதிவு வரியாக மட்டும் 55.08 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பருடன் அந்த வளாகத்தில் இருந்த அனைத்து பணிகளையும் முடித்துக்கொண்ட காக்னிசன்ட் நிறுவனம், 3 மாதங்களுக்கு பிறகு விற்றுள்ளது. dlf,ராமானுஜம் ஐடி பார்க், ஆர்.ஏ.புரத்தில் உள்ள வாடகை இடங்களில் பணிகளை செய்யவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. துரைப்பாக்கம் வளாகம் விற்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை இடமாக தாம்பரம் அடுத்த மெப்ஸில் உள்ள வளாகம் செயல்படும் என்று கூறப்படுகிறது. துரைப்பாக்கம் காக்னிசன்ட் வளாகத்தை வாங்கியுள்ள பெங்களூரு நிறுவனம், அதனை ஹைரைஸ் பில்டிங்காக மாற்றும் பணிகளை செய்து வருகிறது…