1120 விமானங்களை வாங்கும் நிறுவனங்கள்…
இந்தியாவில் விமானங்களில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியை சமாளிக்கும் வகையில் ஆகாசா ஏர் விமான நிறுவனம் 150 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களும் சேர்த்து ஓராண்டில் 1120 விமானங்களை ஆர்டர் செய்கின்றன. விமான சேவை வியாபாரத்துக்கு வந்து 2 ஆண்டுகள் மட்டுமே ஆகும் ஆகாசா ஏர் நிறுவனம் 150 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது சந்தையில் திரும்பிப் பார்க்க வைக்கும் நகர்வாக பார்க்கப்படுகிறது. மொத்தம் 150 போயிங் 737 மேக்ஸ் மற்றும் 737 மேக்ஸ் 10, மற்றும் 737 மேக்ஸ் 8-200 ஜெட் விமானங்கள்வாங்கும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடம் ஏர்இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் இணைந்து 970 விமானங்களை வாங்க ஏற்கனவே ஆர்டர்கள் கொடுத்துள்ளன.
குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனம் 470 விமானங்கள் வாங்க உள்ளன. அதில் 250 ஏர்பஸ் நிறுவனத்திடமும், 220 போயிங் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட உள்ளன.
இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 நேரோ பாடி வகை விமானங்களை வாங்க கடந்தாண்டே ஆர்டர் கொடுத்துவிட்டது.
திவால் நிலையில் இருக்கும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் ஏற்கனவே 72 விமானங்கள் வாங்க ஆர்டர் கொடுத்திருந்த நிலையில், என்ன செய்வது என்று புரியாமல் அந்நிறுவனம் தடுமாறி வருகிறது.
உள்நாட்டில் மட்டும் இயக்கப்படும் விமானங்களில் 1600 வரை உடனே கிடைக்க வாய்ப்புள்ளது என்றும், இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 730 ஆக இருக்கிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 2 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது.
உலகத்திலேயே அதிக விமான போக்குவரத்து மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்திருக்கும் நிலையில் விரைவில், இந்தியாவில் மேலும் அதிக விமானங்கள் பறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.