கச்சா எண்ணெய் விலையேற்றம்..
அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 30 சென்ட் அளவுக்கு விலை உயர்ந்து 80.99 அமெரிக்க டாலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெயும் 38 சென்ட் விலை உயர்ந்து 78.73 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஒருவாரமாக 5.21 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் எரிபொருள் சேமிப்பு அளவுகளும் 3.69 மில்லியன் பேரல்கள் அளவுக்கு குறைந்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் நிலையற்ற சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் கடுமையான தாக்குதலை முன்னெடுக்கப்போவதாக ஈரான் மிரட்டி வருகிறது. இது இஸ்ரேலுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க கடற்படை கப்பல்களும் இஸ்ரேல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வழக்கமான எண்ணெய் விநியோக சங்கிலி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்நிலையில் சீனாவின் கச்சா எண்ணெய் பயன்பாடு குறைந்ததால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் எதிர்பார்த்த அளவை விட குறைவாகவே இருக்கும் என்று IEA அமைப்பு தெரிவித்துள்ளது.