இந்தியாவை ஏமாற்றியதா அமெரிக்கா?
இந்தியாவில் மின்சாதன பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா அண்மையில் வெளிநாட்டு லேப்டாப்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து இருந்தது. இந்த நிலையில் இந்தியாவை ஏமாற்றும் வகையில் அமெரிக்கா செயல்பட்டது தெரியவந்திருக்கிறது. கடந்தாண்டு ஆகஸ்ட்டில் ஆப்பிள், டெல், எச்பி உள்ளிட்ட நிறுவனங்களின் லேப்டாப்களை இந்தியாவில் விற்க லைசன்ஸ் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டது. இதனால் அந்த நிறுவன பொருட்கள் விற்பனை கடுமையாக சரிந்தன. ஆனால் அடுத்த சில வாரங்களில் இந்த லைசன்ஸ் முறையை மத்திய அரசு திரும்பப்பெற்றது. இது பற்றி அமெரிக்க அரசு தற்போது வாய் திறந்துள்ளது. பிரதமர் மோடியின் அரசு இப்படி திடீரென மாற காரணம் என்ன என்று அப்போதைய அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பியதும் தெரியவந்திருக்கிறது. அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் தேங்கும் அபாயம் இருப்பதாக கவலை தெரிவித்த பிறகே இந்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவுண்ட்டர்பாயின்ட் என்ற அமைப்பின் புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் தனிநபர்கள் பயன்படுத்தும் லேப்டாப் மற்றும் கணினிகள் சந்தை ஆண்டுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வணிக பிரதிநிதியான காத்திரன் என்பவர் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியே இது தொடர்பாக வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசியுள்ளார். அப்போது திடீர் மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இப்படி செய்தால் இந்தியாவில் வணிகம் செய்ய யாரும் தயங்குவார்கள் என்றும் அவர் கூறியதாக தகவல் கசிந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களின் அழுத்தம் காரணமாகவே இந்த தடை திரும்பப் பெறப்பட்டதாகவும் ஒரு புகார் உள்ளது. அமெரிக்க நிறுவனங்களின் அழுத்தம் காரணமாகவே திரும்பப் பெறப்பட்டதா அந்த திட்டம் என்ற கேள்வியும்,அமெரிக்கா இந்தியாவை ஏமாற்றிவிட்டதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.