6 மாத செலவுக்கு கையில் பணம் இருக்கிறதா?
உலகளவில் விமான போக்குவரத்துத்துறை கொரோனா காலகட்டத்துக்கு பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் காபா எனப்படும் சர்வதேச அளவிலான ஆலோசனை நிறுவனமான காபா புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் விமான நிறுவனங்கள் எப்போதும் 4 முதல் 6 மாதங்களுக்கு தேவையான நிதியை குறிப்பாக ரொக்கப்பணத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இப்படி செய்வதால் விமானத்துறை பாதிக்கப்படாது என்று கூறியுள்ள அந்த நிறுவனம் இதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும் என கூறியுள்ளது. உள்நாட்டு விமான சேவைத்துறை நடப்பு நிதியாண்டில் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
குறிப்பாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் ஜூன் காலாண்டில் மட்டும் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனங்களான இண்டிகோவுக்கு 1,064 கோடியும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு 789 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உரிய நிதியை வைத்துக் கொள்ளாவிட்டால் விமானத்துறை மேலும் பல சிக்கல்களை சந்திக்கும் என்றும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது. விமான நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் இடையேயான ஒத்துழைப்பும் மிக அவசியம் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.