சம்பளத்தில் ஒரு பங்கு இதுக்கே போயிடுது..

இந்தியர்கள் தங்கள் வருவாயில் சராசரியாக 33% தொகையை கடன்களை கட்டுவதற்கே செலவிடுவதாக புதிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. pwc அன்ட் பெர்ஃபியோஸ் என்ற நிறுவனம், 30லட்சம் பேரின் பணம் செலவழிக்கும் பாணி பற்றி கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. அதில் கடன்களை ஈஎம்ஐ எனப்படும் மாதத்தவணையில் செலுத்துவதை இந்தியர்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைவான வருவாய் உள்ளவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்குவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அந்த ஆய்வறிக்கையில் இந்தியாவில் வரும் வருவாயில் 39 விழுக்காடு அளவுக்கு கடன்களை கட்டவும், 32 விழுக்காடு அளவுக்கு அடிப்படை தேவைகளுக்காகவும், 29 விழுக்காடு வீட்டுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கும் செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களைத் தான் கடன் வாங்க மக்கள் அதிகம் விரும்புவதாகவும், டிஜிட்டல் வழியில் கடன் வாங்குவதும் தெரியவந்துள்ளது. அதிக வருவாய் உள்ளவர்கள் தங்கள் வருவாயில் 46 விழுக்காடு அளவுக்கு கடனை அடைக்க பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. காப்பீடுகளை கட்டுவதற்கும் பரவலாக மக்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வெளியே சாப்பிடுவது, படம் பார்ப்பது, சுற்றுலா செல்வதற்கும் அனைத்து தரப்பினரும் பரவலாக செலவு செய்வதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தினசரி அத்தியாவசியத் தேவைகளுக்கு 18 விழுக்காடும், வீட்டு வாடகை16%, மருத்துவ செலவுகள் 15%, எரிவாயுவுக்கு 10% செலவை மக்கள் செய்வது தெரியவந்துள்ளது. இந்தியாவில் மக்கள் தங்கள் சேமிப்புகளை 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்திருப்பதும் தெரியந்துள்ளது. தனிநபர் கடன்களை மக்கள் வாங்கும் விகிதம் 13.7% அதிகரித்துள்ளதும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது., செப்டம்பர் 2024 கணக்குப்படி 55.3 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு மக்கள் தனிநபர் கடன் வாங்குகின்றனர். லைஃப்ஸ்டைல் தேவைகளுக்கு மக்கள் 62% செலவழிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறைந்த சம்பளம் உள்ளவர்கள் மாதம் 958 ரூபாயும், அதிகபட்சம் 3,207 ரூபாயும் சராசரியாகவும் மக்கள்செலவு செய்கின்றனர். குறைந்த வருவாய் உள்ளவர்கள் ஆன்லைன் சூதாட்டம் விளையாட 22% வரை செலவு செய்வதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. மக்கள் செலவு செய்ய யுபிஐ முறையைத் தான் அதிகம் விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.