வரலாற்றில் பெரிய பணக்காரர் மஸ்க்..
உலகிலேயே அதிக சொத்து மதிப்பு வைத்திருக்கும் பணக்காரர்கள் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் முதலிடம்பிடித்துள்ளார். அவரின் சொத்துமதிப்பு 347.8பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனபங்குகளின் மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த உயர்வை மஸ்க் பெற்றுள்ளார். தேர்தல் நாள் முதல் இதுவரை டெஸ்லா நிறுவன பங்குகள் 40 % உயர்ந்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் அந்நிறுவனத்தின் பங்குகள் 3.8 விழுக்காடு உயர்ந்து 352.56 அமெரிக்க டாலர்களாக 3 ஆண்டுகளில் இல்லாத உச்சம் தொட்டுள்ளது. கடந்த நவம்பர் 2021-க்கு பிறகு முதல் முறையாக தனது சொத்துமதிப்பை மஸ்க் உயர்த்தி புதிய உச்சம் தொட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் மஸ்குக்கு உள்ள நெருக்கம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. . அமெரிக்க அரசின் செயல்திறன் தலைவராகவும் மஸ்க் தேர்வாகியுள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியுடன் இணைந்து செயல்திறன் பிரிவை கவனிக்க இருக்கிறார். டெஸ்லா மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளித்துறையிலும் மஸ்கின் நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ், தனியார் ஏஐ நிறுவனத்திலும் கணிசமான முதலீடுகளை மஸ்க் செய்துள்ளார். ஆரக்கல் நிறுவனத் தலைவர் லாரி எலிசனின் சொத்து மதிப்பை விட மஸ்கின் சொத்துமதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகமாகும். கடுமையான சரிவுகளை சந்தித்து வந்த டெஸ்லா நிறுவன பங்குகள் திடீரென மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் மஸ்க் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.