வைரலாகும் மஸ்கின் இ-மெயில்..

கொரோனா பெருந்தொற்று முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய காலகட்டமான 2022 ஆம் ஆண்டு, டெஸ்லா நிறுவன பணியாளர்களுக்கு எலான் மஸ்க் ஒரு கடிதத்தை மின்னஞ்சலில் எழுதியிருந்தார். அதில் வீட்டில் இருந்து பணியாற்றக்கூடாது என்றும் அது விஷம் என்றும் கூறியிருந்தார். அனைவரும் அலுவலகத்துக்கு வந்து வாரத்திற்கு 40 மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்றும் அந்த மெயிலில் கூறியிருந்தார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த கடிதத்தை வென்ச்சர் ஃபன்ட் நிறுவனத்தின் சிஇஓ கிறிஸ் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட எலான் மஸ்கும், ஆமாம் இது உண்மைதான் என்று பதில் அளித்துள்ளார். அலுவலகத்திற்கு வந்து பணிபுரிந்தால் மட்டுமே பணியாளர் வேலையில் இருப்பதாக கருத முடியும் என்றும், எங்கோ அமர்ந்துகொண்டு பணிகளை செய்ய முடியாது என்றும் அவர் கூறியிருந்தார். தாம் ஆலைகளில் அதிக நேரம் இருப்பதால்தான் டெஸ்லா ஒழுங்காக இயங்குவதாகவும், இல்லையெனில் என்றோ அந்நிறுவனம் திவாலாகியிருக்கும் என்றும் மஸ்க் கூறியுள்ளார். மஸ்கின் கடிதம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இது பற்றி ஆரோக்கியமான விவாதமும் நடந்து வருகிறது. அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யத்தான் சம்பளம் தரப்படுவதாக ஒரு தரப்பும், வீட்டில் இருந்து பணியாற்றினால் ஆக்கபூர்வமாக தம்மால் பணியாற்ற முடிவதாக மற்றொரு தரப்பினரும் மாறி மாறி விவாதித்து வருகின்றனர்.