சரியும் வேலைவாய்ப்புகள்..

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் விகிதம் 10 விழுக்காடு குறைந்திருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சரிவு தொடர்ந்து 3 ஆவது மாதமாக நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 8லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் 10 விழுக்காடு குறைந்து 7 லட்சத்து 39 ஆயிரமாக வீழ்ந்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 7லட்சத்து 77 ஆயிரமாக இருந்ததாகவும் ஈபிஎஃப் நிறுவனம் தனது புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. பிப்ரவரியில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களில் 18 முதல் 25 வயதுள்ளோரின் விகிதம் 57.7விழுக்காடாக உள்ளது. அதேபோல் புதிதாக பணியில் சேர்ந்துள்ள பெண்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது 28.14 விழுக்காடு உயர்வாகும். ஜனவரியில் இந்த விகிதம் 15.62 விழுக்காடாக இருந்தது. 13லட்சத்து 20 ஆயிரம் பேர் பிப்ரவரியில் ஒரு வேலையில் இருந்து வெளியேறி வேறு வேலைக்கு மாறியுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.