இந்தியாவில் ஆர்வம் காட்டும் ஐரோப்பிய கார் நிறுவனங்கள்

செக் குடியரசு நாட்டை பூர்விகமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஸ்கோடா. இந்த நிறுவனம் அடுத்தாண்டு இந்தியாவிற்குள் 1லட்சம் கார்களை விற்க திட்டமிட்டுள்ளது. இது வருடாந்திர சராசரி அளவை விட இரண்டு மடங்காகும். இந்திய சந்தைகளில் மாருதி சுசுகி நிறுவனம், ஜப்பான், கொரியாவைச் சேர்ந்த நிறுவனங்களில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் ஸ்கோடா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களான ஃபோக்ஸ்வாகன், ரெனோ, சிட்ராயென் ஆகிய நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன. இந்திய சந்தைகளுக்கு தகுந்தபடி ஸ்கோடா நிறுவனம் தனது கார்களை வடிவமைத்து வருகிறது. அனைவரும் வாங்கும் விலையில் அதே நேரம் சொகுசாக காட்சியளிக்கும் வகையில் அந்த நிறுவனம் கார்களை தயாரித்து வருகிறது. இதே பாணியைத்தான் ஜெர்மனி நிறுவனமான ஃபோக்ஸ்வாகனும் கையாள்கிறது.
இளம் தலைமுறையினருக்கு எஸ்யுவி வாகனங்கள் அதிகம் பிடிப்பதால்,கைலாக் என்ற பிராண்டை ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. கடந்த 2022-23 இறுதி வரை அந்நிறுவனம் 1லட்சம் கார்களை விற்க 2 ஆண்டுகள் ஆகின. ஆனால் தற்போது இதனை அடுத்த ஓராண்டில் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய தயாரிப்புகளான டாடா மற்றும் மஹிந்திரா நிறுவன கார்கள் சந்தையில் பங்கு 25.4%ஆக இருக்கின்றன. கொரிய கார் நிறுவனங்களான ஹியூண்டாய், கியா ஆகிய நிறுவனங்கள் 19.1 %, ஜப்பானிய-இந்திய கூட்டு நிறுவனமான மாருதி சுசுகி 51.2% பங்களிப்பை தருகின்றன. அதேநேரம் ஹியூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் இணைந்து இளம் தலைமுறையினரை இலக்காக வைக்கின்றனர். வெறும் விலை மட்டுமின்றி வடிவமைப்பு, தொழில்நுட்பமும் கார்விற்பனையில் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.