IPOவிற்கு ஒப்புதல் பெற்ற பிரபல நிறுவனங்கள்..
இந்திய பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக செபி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 பிரபல நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு ஆரம்ப பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட செபி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, விஷால் மெகாமார்ட், ஏசிஎம்இ சோலார் , மமதா மெஷினரி, ஹியூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களுக்கு செபி சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்த ஓராண்டிற்குள் ஆரம்ப பங்குகளை இந்த நிறுவனங்கள் வெளியிடலாம். ஹியூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவில் இயங்கும் தென்கொரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் 25,000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஓ வரும் தீபாவளிக்கு முன்பே சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் ஸ்விகி நிறுவனம் புதிதாக 3750 கோடி ரூபாயும், ஏற்கனவே உள்ள ஈக்விட்டிகளை ஓ எப்எஸ் முறையில் விற்று பணமாக்கவும் திட்டமிட்டுள்ளது. விஷால் மெகா மார்ட், ஏசிஎம்இ ஆகிய நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதத்தில் இதற்கான பணிகளை செய்தது. இந்த இரு நிறுவனங்களும் விரைவில் தங்கள் IPOவை சந்தைபடுத்த இருக்கின்றன. இதேபோல் குஜராத்தைச் சேர்ந்த மமதா மெஷினரி நிறுவனம் ஏற்கனவே உள்ள தங்கள் நிறுவன ஈக்விட்டிகளை ஓஎஃப் எஸ் வசதி மூலம் விற்று நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. 73.82லட்சம் பங்குகளை இந்த நிறுவனம் விற்கவும் செபி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தாண்டில் மட்டும் 62 நிறுவனங்கள் தங்கள் ஆரம்ப பங்குகளை வெளியிட்டுள்ளன. ஆரம்ப பங்குகள் மூலம் இதுவரை 64,000 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு 57 நிறுவனங்கள் வசூலித்த 49,436 கோடி ரூபாயை விட மிகவும் அதிகமாகும். இது 29% அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.